கோடையின் கொடுமையிலிருந்து வனவிலங்குகளின் தாகம் தணிக்க, விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் தண்ணீர் தொட்டி (Water Tank) அமைத்து, அவற்றில் தண்ணீர் நிரப்பி சேவை செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையோரத்தில் மனித-வனவிலங்கு மோதல் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. சில விவசாயிகள் தங்கள் சாகுபடிப் (cultivation) பயிரைக் காக்க, சட்டவிரோதமான மின்வேலிகளையும் (Electric fence) அமைத்து, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் இறப்புக்குக் காரணமாகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வனவிலங்குகளின் கோடைகால துயர் துடைக்க, சில விவசாயிகள் முன்வந்திருப்பது மனதை நெகிழச் செய்கிறது.
தண்ணீர்த் தொட்டி:
கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் கோடை காலத்தில், வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, தனியாகத் தங்களது தோட்டங்களில் தண்ணீர் தொட்டிகளை கட்டி, நீர் நிரப்பி வைத்துள்ளனர். கோவை புறநகர் பகுதியில் தண்ணீர், உணவு தேடி வனவிலங்குகள் கிராமங்களை முற்றுகையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. தற்போது, கோடை காலம் நெருங்கி வரும் வேளையில், வனவிலங்குகள் இரவு நேரம் மட்டுமல்லாமல், பகல் நேரத்திலும், தண்ணீர் தேடி, மலையோர கிராமங்களுக்குள் நுழைகின்றன. இவற்றைத் தடுக்க, ஆனைகட்டி, நரசிம்ம நாயக்கன்பாளையம் பண்ணாரியம்மன் கோவில், ராயர் ஊத்துபதி, கல்பற்றாயன் கோவில், தோலம்பாளையம் உள்ளிட்ட, 7 இடங்களில் வனத்துறை (Forest department) சார்பில் தண்ணீர் தொட்டி உள்ளது. வனப்பகுதிக்குள் இருந்து வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள், தொட்டியில் உள்ள நீரை அருந்திவிட்டு, கிராமங்களுக்குள் புகாமல், வனத்துக்குள் திரும்பி சென்று விடுகின்றன.
வனவிலங்குகளைப் பாதுகாக்க
தற்போது, வன எல்லையில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் சிலவற்றில் மட்டுமே நீர் உள்ளது. இதனால் யானை, மான் (Deer) உள்ளிட்ட விலங்குகள் கிராமங்களுக்குள் புகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தனியார் சிலரும், தங்களது மலையோர தோட்டங்களில் வனவிலங்குகளுக்காக தண்ணீர் தொட்டியைக் கட்டி, அதில் நீர் நிரப்பி கோடை காலத்தில் (Summer) வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தனது தோட்டத்தில் தண்ணீர் தொட்டியை கட்டியுள்ள விவசாயி துரைசாமி கூறுகையில், ''கோடை காலத்தில் வனவிலங்குகளின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்வதால், அவை மலையோர கிராமங்களுக்குள் புகுந்து, பயிர், உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கலாம். அதே நேரம் வனவிலங்குகளின் உயிர்களையும் காப்பாற்றலாம்'', என்றார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை! வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்!
நாம் ஏன் இயற்கை விவசாய முறையைக் கையாள வேண்டும்?
Share your comments