பருவம் தவறி பெய்யும் மழையால், பயிர்களின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறதென்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தளவில் தென்மேற்கு பருவமழை (South West Monsoon), வடகிழக்கு பருவமழை (Northeast monsoon), கோடை மழை ஆகியன விவசாயத்துக்கு பெரிதும் கைகொடுக்கிறது. இவை மூன்றும், அந்தந்த காலகட்டத்தில் பெய்தால், அதனால் விளையும் பயன்கள் ஏராளம். ஆனால், பருவம் தவறி பெய்யும் மழையால், பயிர்கள் பாதிப்பதோடு, விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
பருவமழை:
தென்மேற்கு பருவமழை ஜூனில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. இதில் கோவை மாவட்டம் நல்ல பயனை பெறும். கோடை மழை ஏப்ரல், மே மாதங்களில் வெப்பசலனத்தால் பெய்யும். வடகிழக்கு பருவமழை அக்டோபன் மாதம் துவங்கி, டிசம்பர் வரை நீடிக்கும். கோவையின் வடபகுதியில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்போதும், அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், காரமடை வட்டாரத்தில் அதிக அளவு பெய்துள்ளது. இருந்தாலும் பருவகாலம் முடிந்து, தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை, விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பருவம் தவறி மழை பெய்து வருகிறது. இது வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவை பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல பலனை தரும். இவைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. அவரை பயிரிட்ட விவசாயிகளுக்கு, தற்போது பூ பிடிக்கும் பருவம் என்பதால், அதிக மழை பெய்யும்போது, பூக்கள் உதிர்ந்து காய் பிடிப்பதில் சிக்கல் ஏற்படும்.
சோளம் (Maize) பயிரிட்ட விவசாயிகளில், தற்போது கதிர்பிடித்திருந்தால், மழை ஈரம் இறங்கி கதிர்கள் கரிபூட்டை நோயால் கறுத்துப்போகும். இதனால் விளைச்சல் குறைந்து, காய்ந்த தட்டுக்களை கால்நடைகளுக்கு (Livestock) போடும் நிலை ஏற்படும். மழையால், பனிக்கடலை விளைச்சலும் பாதிக்கப்படும் என்று நாயக்கன்பாளையம் விவசாயி விஜயகணபதி (Vijaya Ganapathy) கூறினார்.
வேளாண் துறையின் ஆலோசனை:
தற்போது பெய்து வரும் மழை, கரும்பு, வாழை உள்ளிட்டவை பயிரிட்ட விவசாயிகளுக்கு சிறந்த பயனை கொடுக்கும். தற்போது, தென்னை மரத்துக்கு உரம் (Fertilizer) போட சரியான தருணம். ரசாயன உரம், தொழு உரம், உயிர் உரங்கள் என, எந்த உரம் போட்டாலும், அதனால் தென்னை மரத்துக்கு சாதாரண காலங்களை விட, தற்போதைய மழைக்காலத்தில் அதிக பயன் இருக்கும். பருவம் தவறிப் பெய்யும் மழையில் பயிர்கள் வீணாவதைத் தடுக்க, வயலில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொண்டாலே போதும். மேலும் அதிக மழையால் வயலில் மழைநீர் தேங்கினால், வாய்க்கால் வழியாக விரைவில் வெளியேற்ற வேண்டும் என்று நாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கூலி ஆட்கள் பற்றாக்குறை! விவசாயிகளுக்கு கைகொடுக்கும் இயந்திரங்கள்!
கூடுதல் மகசூல் பெற வம்பன்-4 பாசிப்பயறு இரகம்!
தென்னை ஆராய்ச்சி பணியைத் துவங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை!
Share your comments