கொரோனா நோய் தொற்றை தடுக்கும் பொறுட்டு தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊரடங்கு, காரணமாக பூக்கள் பறிக்காமல் செடிகளில் காய்ந்து வருகிறது. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
அலங்கார மலர்கள் சாகுபடி!
ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 1,500 ஏக்கரில் பசுமை குடில்கள் அமைத்து, ரோஜா, கிர சாந்திமம், ஜெர்புரா, கார்னேசன் போன்ற அலங்கார கொய் மலர்களும், திறந்த வெளியில், 5,000 ஏக்கரில் செண்டு மல்லி, சாமந்தி, பட்டன் ரோஜா போன்ற பல்வேறு மலர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
கொரோனா 2வது அலை
கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட நஷ்டத்தை தவிர்க்கும் பொருட்டு விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்ட நிலையில், கொரோனா 2-ம் அலை காரணமாக, ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், சாகுபடி செய்த பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு மீண்டும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பூக்களை சந்தைப்படுத்த முடியாமல், செடிகளில் இருந்து பறிக்காமல் விட்டுள்ளனர். சிலர் செடிகளை காப்பாற்ற, பூக்களை பறித்து சாலையோரம் கொட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக பூ விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விவசாயிகளுக்கு மட்டும், 350 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, பசுமை குடில்களில் உள்ள செடிகளை பராமரிப்பு செய்யாவிட்டால் வீணாகி விடும்.
அதனால், அவற்றை பாதுகாக்க மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாயும், திறந்த வெளி செடிகளை காக்க, 30 ஆயிரம் ரூபாயும் செலவு செய்து வருகிறோம். ஆனால், ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை, கடன் வாங்கி செடிகளை பராமரிக்கிறோம். கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தையே ஈடுகட்ட முடியவில்லை. நடப்பாண்டும் பூக்கள் வீணாகி வருவதால் வேதனையில் தவித்து வருவதாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
கொப்பரைக்கு ரூ.3 லட்சம் வரைக் கடன் - வேளாண்துறை அறிவிப்பு!
Share your comments