விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை அடுத்து போராட்டம் நிறுத்தப்படுவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வன்முறையில், ஒருவர் உயிரிழந்தார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டகாரர்கள் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு கடந்த 65 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தோல்வியடையும் பேச்சுவார்த்தை
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு, விவசாயிகளுடன் நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று (நேற்று) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன. அதற்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுத்து விட்டது.
இதைதொடர்ந்து, டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகு, சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய எல்லைகளில் இருந்து நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணியை நடத்த விவசாய அமைப்புகளுக்கு டெல்லி போலீஸ் அனுமதி வழங்கியது.
டிராக்டர் பேரணியில் தடியடி
ஆனால் குடியரசு தின அணிவகுப்பு முடிவடைவதற்கு முன்பே, விவசாயிகளில் ஒரு பிரிவினர், சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லை பகுதிகளில் போலீ்ஸ் தடுப்புகளை டிராக்டர்களால் மோதி உடைத்து அகற்றினர். இதனால் விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, தொடர்ந்து விவசாயிகள் தடுப்புகளை அகற்றி முன்னேறி செல்ல முயன்றதால் விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் குழு
இதனிடையே, விவசாயிகள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் பேரணியை நடத்தாமல் டெல்லி நகருக்குள் நுழைந்தனர், சில விவசாயிகள் டிராக்டர்களுடன் செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைந்து அங்கு சுதந்திர தினத்தன்று பிரதமர் தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் கொடி ஏற்றினர். கட்டிடத்தின் பல இடங்களில் சீக்கிய மதக்கொடிகளையும், சங்க கொடிகளையும் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது.
டெல்லியில் 144 தடை உத்தரவு
போலீஸ் தடுப்புகளை அகற்றி முன்கூட்டியே நகருக்குள் நுழைந்தவர்கள், கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று 41 விவசாய சங்கங்கள் அடங்கிய கூட்டு அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்தது. வன்முறைக்கும், தங்கள் அமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியது. விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறையில், ஒருவர் உயிரிழந்தார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டகாரர்கள் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிராக்டர் பேரணி நிறுத்தம்
இந்த நிலையில், பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து டிராக்டர் பேரணி மூலம் நடத்திய போராட்டத்தை நிறுத்திக்கொள்வதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தப்படு முடிவு அறிவிக்கப்படும் என்றும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
தடுப்புகளை உடைத்தெரிந்து டெல்லிக்குள் நுழைந்து தொடங்கியது விவசாயிகள் பேரணி!
Share your comments