Fast Spreading B.A.2 Virus
ஒமைக்ரான் தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், அதில் இருந்து உருவான 'பி.ஏ.2' வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுதும், மூன்றாம் அலைக்கு வழிவகுத்த, ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் பரவல் தற்போது குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி, நாம் நகர்ந்து வருகிறோம். இந்நிலையில், ஒமைக்ரானினிலிருந்து உருமாறிய பி.ஏ.2 வகை வைரசால், மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின், கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்யும் தொழில் நுட்பக் குழுவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் நேற்று கூறியதாவது: கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்றில் இருந்து 'பி.ஏ.1 - பி.ஏ.1.1 - பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 என பல துணை வைரஸ்கள் உருவாகி உள்ளன. அவற்றை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
பி.ஏ.2 வைரஸ் (B.A.2 Virus)
பெரும்பாலானோர், பி.ஏ.1 வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பி.ஏ.2 வகை வைரசால் தற்போது அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதர வகைகளைக் காட்டிலும், பி.ஏ.2 வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. பி.ஏ.1 வகையை விட, பி.ஏ.2 வகை கொடியது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனினும், அதன் தீவிரத்தை உணர, அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
கவனம் தேவை (Be careful)
ஒமைக்ரான் வகை வைரஸ் குறைந்த பாதிப்பு தரக்கூடியது எனக் கூற இயலாது; எனினும், டெல்டாவை விட அது சற்று குறைவாக பாதிப்பு தரக்கூடியது தான். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிக உயிரிழப்புகளும் பதிவாகிறது. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க
உருமாறிய புதிய டெல்டக்ரான் வைரஸ்: பிரிட்டனில் கண்டுபிடிப்பு!
Share your comments