தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 2ஆவது நாளாக 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 5,700 கன அடியாக அதிகரித்துள்ளது .
இந்நிலையில், அணையில் இருந்து 7,500 கன அடி நீர் பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் அணையின் பாதுகாப்பை கருதி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றம் விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த தென்பெண்ணை ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்பென்னை ஆற்றில் மக்கள் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ ஆற்றுக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கே.ஆர்.பி அணைக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
மாற்றுத்திறனாளி பெற்றோருக்கு மானியத்துடன் வங்கிக் கடன்
PM Awas Yojana திட்டத்தில் வீடு யாருக்கு கிடைக்கும், வெளியான பட்டியல்
Share your comments