காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வருகின்றன, காவிரி ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது, இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம்
கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவின் கபினி (Kabini Reservoir) மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு (KrishnaRajaSagara Dam) நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்பட்டு வருகிறது.
அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பு
தற்போதையை நிலவரப்படி, கபினி அணையிலிருந்து மட்டும் 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 84 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நீர்மட்டம் 81 அடியை எட்டியுள்ளது. கபினி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் படிப்படியாக நீர் திறப்பு அதிகரிப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 4,700 கன அடியாகவும் உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 124 அடியாக உள்ள நிலையில், தற்போது 108 அடியை எட்டியுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதையடுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் (Hogenakkal) காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை (Flood warning) விடுக்கப்பட்டுள்ளது. தண்டோரா மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆலம்பாடி, ஊட்டமலை பகுதிகளில் தாழ்வாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதபோல், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 32000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 3 வது நாளாக பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
மேலும் படிக்க...
கொட்டப்போகிறது அதி கனமழை - நீலகிரிக்கு ரெட் அலேர்ட்!
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் - விவசாயிகள் வேதனை!!
குறுவை நெல் சாகுபடியில் தமிழகம் சாதனை - தமிழக அரசு!!
Share your comments