'புளூ' வைரஸ் பாதிப்பு, குழந்தைகள் மத்தியில் கடந்த சில வாரங்களாக அதிகரிக்கத் துவங்கி உள்ளது. கொரோனா, புளூ இரண்டுக்கும் அறிகுறிகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. இரண்டிலும் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு என ஒரே மாதிரியாகவே இருக்கும். இரண்டுமே வைரஸ் தொற்றால் ஏற்படுவது. அறிகுறிகளை வைத்து இவற்றை வேறுபடுத்த முடியாது. பரிசோதனையில் மட்டுமே உறுதிப்படுத்த இயலும்.
இருமல், தும்மல் வழியே வெளிவரும் நீர்த் திவலைகளால் பரவும் விதம் ஒரே மாதிரியாக இருந்தாலும், புளூவில் கொரோனாவைப் போன்று தீவிர பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் அரிது, அதோடு பரவும் தன்மையும் குறைவு.
புளூ வைரஸ்
புளூ தொற்றாக இருந்தால், இரண்டு - நான்கு நாட்களில் சரியாகி விடும். அப்படி இல்லாமல் தீவிர அறிகுறிகள் நான்கைந்து நாட்கள் இருந்தால், கொரோனா பரிசோதனை செய்து உறுதி செய்வது பாதுகாப்பானது.
புளூ வைரஸ், பாக்டீரியா இரண்டினாலும் பரவும். 'ஸ்வைன் புளூ' எனப்படும் பன்றிக் காய்ச்சல் வைரசால் பரவும். 'ஹீமோபிளஸ் இன்புளூயென்சா' பாக்டீரியாவால் பரவும். இதற்கு தடுப்பு மருந்து உள்ளது. பிறந்த ஆறு வாரத்தில் ஒன்று, 10வது வாரம், 14வது வாரம், அதன் பின் ஒன்றரை வயதில் என நான்கு 'டோஸ்' போட வேண்டும். ஸ்வைன் புளூவிற்கும் தடுப்பூசி உள்ளது.
தடுப்பூசி
புளூ ஆண்டுதோறும் ஜூன் - டிசம்பர் வரை மழைக் காலத்தில் பரவும். இந்த வைரசும் ஆண்டுதோறும் தன் மரபணுவில் மாற்றம் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போட வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், புளூவிற்கு தடுப்பூசி போடுவது நல்லது.
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை நிமோனியா அதிகம் பாதிக்கிறது. இதனால் ஏற்படும் இறப்பும் அதிகம். நிமோனியாவைத் தடுக்க, 'நிமோகாக்கல்' தடுப்பு மருந்தையும் போடுவது நல்லது. வழக்கமாக போட வேண்டிய தடுப்பூசியை, குறிப்பிட்ட தேதியில் போட தவறினாலும், தாமதமாகவாவது போட்டுக் கொள்ள வேண்டும். 'ரோட்டா' வைரஸ் தடுப்பூசி, குழந்தை பிறந்த ஆறு வாரம் - எட்டு மாதத்திற்குள் தான் போட வேண்டும்.
Also Read: இந்தியாவில் கொரோனா 'எண்டமிக்' நிலையில் உள்ளதா? WHO விஞ்ஞானி விளக்கம்!
இப்படி ஒரு சில தடுப்பூசிகள் மட்டுமே குறிப்பிட்ட வயதிற்குள் போட வேண்டும். பெரும்பாலானவை சில வாரங்கள், மாதங்கள் தாமதமானாலும் பரவாயில்லை; போட்டு விடுவதே நல்லது. இல்லாவிட்டால், குறிப்பிட்ட வைரசின் பாதிப்பிற்கு, குழந்தைகள் ஆளாக நேரிடலாம்.
டாக்டர் எஸ்.ஷோபனா,
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்,
மகளிர் மையம்,
மதர்ஹூட் மருத்துவமனை,
கோவை
0422 - 4040202,
98948 10099
மேலும் படிக்க
குழந்தைகளுக்கு சளித்தொல்லை: பெற்றோர்களே அலட்சியம் வேண்டாம்!
ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை
Share your comments