இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலைகளில் (Government Jobs) இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மாநில சிறப்பு ரிசர்வ் கான்ஸ்டபிள் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகச் சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.இது தொடர்பாகக் கர்நாடக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது, அதில் கர்நாடக சிவில் சர்வீஸ் விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இட ஒதுக்கீடு
ஒரு சதவிகித இட ஒதுக்கீடு, அதாவது கடந்த ஜூலை 6ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அனைத்து அரசு வேலைகளிலும் பொதுப் பிரிவிலும் சரி, இதர பிரிவுகளில் சரி திருநங்கைகளுக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதன்படி அரசு வேலை தொடர்பான விண்ணப்பங்களில் ஆண், பெண் பிரிவுகளுடன் 'மற்றவர்கள்' என்ற பிரிவும் சேர்க்கப்பட வேண்டும்.
பாகுபாடு
பாகுபாடு காட்டக்கூடாது, அதேபோல வேலைக்குத் தேர்வு செய்யும் முறையில் திருநங்கைகளுக்கு எதிராக எந்தவொரு பாகுபாடும் காட்டக்கூடாது என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநங்கைகள் யாரும் வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் அதே பிரிவில் இருக்கும் ஆண் அல்லது பெண்களுக்கு வழங்கப்படலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சங்கமா தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கர்நாடகா அரசின் நடவடிக்கை அரசு வேலைகளில் சேர்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றாலும் கூட மற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய நீதிமன்றம் (court) வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் நிலைப்பாடு
இது தொடர்பாகத் தனியாக வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவது குறித்து பரிசிலினை செய்யப்படும் எனக் கூறிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக அரசின் நடவடிக்கையைப் பாராட்டினர். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
Share your comments