தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினால் அடுத்த சில மணி நேரங்களுக்குள் தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பினையும் சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28.09.2023 மற்றும் 29.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 30.09.2023 முதல் 03.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: (29.09.2023 மற்றும் 30.09.2023) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: (27.09.2023) தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வானிலை தொடர்பான முழு விவரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள mausam.imd.gov.in/chennai என்கிற இணையதளத்தை காணவும்.
இதையும் காண்க:
Share your comments