ரேஷன் கடைகளில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை துவக்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது.
காஸ் சிலிண்டர் (Gas Cylinder)
இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' எண், முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சிலிண்டர் வேண்டி பதிவு செய்ததும் 'டெலிவரி' செய்யப்படும். வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள், கல்லுாரிகளில் படிப்போர் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால், சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகின்றனர்.
அவர்களின் வசதிக்காக, முக்கிய இடங்களில் உள்ள ஏஜன்சிகளில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்கப்படுகிறது. அதை வாங்க முகவரி சான்று தேவையில்லை; ஏதேனும் ஒரு அடையாள சான்று வழங்கினால் போதும்.
முதன்முறை சிலிண்டர் வாங்கும்போது மட்டும் 'டிபாசிட்' கட்டணம் செலுத்த வேண்டும். பின், சிலிண்டரில் காஸ் தீர்ந்ததும், மீண்டும் வாங்கும்போது, அம்மாதத்திற்கான காஸ் விலையை வழங்கினால் போதும். பலருக்கு, 5 கிலோ சிலிண்டர் விற்பனை விபரம் தெரியவில்லை. இதையடுத்து, அனைவருக்கும் தெரியும் வகையில், இந்தியன் ஆயிலுடன் இணைந்து, அந்த சிலிண்டரை ரேஷன் கடைகளில் விற்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும் ரேஷன் கடைகளில் விற்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, அத்திட்டம் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்.
இதுதொடர்பாக, கூட்டுறவுத் துறையின் பொது வினியோக திட்ட இணை பதிவாளர் தேன்மொழி, சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'கூட்டுறவு ரேஷன் கடைகளில், இந்தியன் ஆயில் நிறுவனம் வகுத்துள்ள பாதுகாப்பு நிபந்தனைக்கு உட்பட்டு, உரிய அலுவலரிடம் உரிமம் பெற்று, 5 கிலோ வணிக சிலிண்டர்களை விற்பனை செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், 'ரேஷன் கடைகளில் உணவு தானியங்களை வைக்கவே இடவசதி இல்லை. 'அதிக ஆபத்து உள்ள சிலிண்டர்களை பாதுகாப்பாக கையாளுவதில் அதிக சிரமம் உள்ளது; எனவே, சிலிண்டர் விற்பனையை துவக்கும் முன், அதற்கான சாதக, பாதகம் குறித்து ஊழியர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்' என்றனர்.
மேலும் படிக்க
வேளாண் கருவிகளை மானியத்தில் பெற உழவன் செயலி பதிவு கட்டாயம்!
ரசாயன உரங்களுக்குப் பதிலாக நானோ உரங்கள்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல் !
Share your comments