புதுமைப் பெண் திட்டத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின், திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புகளை எடுத்துரைத்து மாணவிகளிடம் பேசினார்.
6 முதல் 10ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பள்ளி மாணவிகள் வழிநெடுக சாலையோரம் நின்று, பலூன்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி வரவேற்றனர்.
பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். இதையடுத்து, புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், சில மாணவிகளுக்கு வங்கி கணக்கிற்கான டெபிட் கார்டுகளையும் வழங்கினார்.
பின்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வித்துறையில் தி.மு.க அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டார். மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை அரசு செலவாக கருதவில்லை எனவும், எதிர்காலத்திற்கான முதலீடாகவே பார்ப்பதாகவும் கூறினார். இந்த திட்டத்தின் மூலம் பெண் கல்வி மேம்பட்டு, பாலியல் சமத்துவம் ஏற்பட்டு, குழந்தை திருமணம் போன்றவை தடுக்கப்படும் என பெருமிதம் தெரிவித்தார்.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் நிதியை, மாணவிகள் தங்களது கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை படிப்பதோடு, தகுதியான வேலைக்கும் செல்ல வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
Share your comments