கோடை காலத்தில் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயை எவ்வாறு தடுப்பது என கால்நடை துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலம் மக்களை மட்டும் இன்றி கால்நடைகளையும் பாதித்து வருகிறது. இக்காலங்கள் வெயில் காரணமாக பல்வேறு நோய்கள் கால்நடைகளை தாக்கும் அபாயம் உள்ளது. அந்த வகையில் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோய் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் சரவணன் அறிவுரை வழங்கியுள்ளார்.
நோய்கான அறிகுறிகள்
-
ஆட்டுக்கொல்லி நோய் கோடை காலத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் அதிக இறப்பை ஏற்படுத்தி ஆடு வளர்ப்போருக்கு பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தகூடிய ஒரு கொடிய நோயாகும்.
-
இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.
-
இந்நோய் பாதித்த ஆடுகளுக்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அதிக காய்ச்சல் இருக்கும்.
-
மூக்கில் இருந்து சளி வடிதல், வாயின் உட்புறங்களில் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ் நீர் வடிதல் கழிச்சல் உள்ளிட்ட உடல் கோளாறுகள் ஏற்படும்.
-
ஆடுகள் சோர்ந்து இருப்பதால் தீனி உட்கொள்ளாது.
-
நோய் பாதித்த ஆடுகளிடம் இருந்து இந்நோய் மற்ற ஆடுகளுக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும். ஆடுகள் இருமும் போது வெளிப்படும் சளி மற்றும் உமிழ் நீர் ஆகியன காற்றில் கலந்து மற்ற ஆடுகளின் மீது பரவும் போது மற்ற ஆடுகளுக்கு இந்நோய் தொற்றிக்கொள்ளும்.
-
நோய் தொற்று உள்ள ஆடுகளின் கண் மற்றும் மூக்கில் இருந்து வடியும் நீர் மற்றும் சிறுநீர் ஆகியவற்றாலும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது.
தடுக்கும் வழிமுறைகள்
-
நோய் பாதித்த ஆடுகளை தனியாக பிரித்து பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
-
ஒரு லிட்டர் தண்ணீரில் 90 கிராம் உப்பை கலந்து கொதிக்க வைத்து ஆற விட்டு, இந்த உப்பு நீரை கொண்டு வாய் மூக்கு பகுதியை கழுவ வேண்டும்.
-
வாய் புண்ணை குணமாக்கும் கிளிசரின் மருந்தை பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயில் தினமும் வாய்புண்கள் ஆறும் வரை தடவலாம்.
-
உடலுக்கு தெம்பு தரும் குரோவிபிளக்ஸ் போன்ற பி காம்பிளக்ஸ் சத்து மருந்துகளை ஆடுகளுக்கு காலை, மாலை வழங்கலாம். டேராமைசின் பவுடர் அல்லது டேராமைசின் லிக்விட் ஆன்டிபயாடிக் மருந்து அல்லது என்டிரோபிளாக்சின் லிக்விட் ஆன்டிபயாடிக் மருந்து ஆகியவற்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.
-
ஆட்டுக்கொல்லி நோய்க்கு பி.பி.ஆர் தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை போடுவது அவசியம். குறிப்பாக 3 முதல் 6 மாத வயதிற்கு உட்பட்ட ஆட்டு குட்டிகளுக்கு கண்டிப்பாக போட வேண்டும்.
-
ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பி.பி.ஆர் தடுப்பூசியை வருடத்திற்கு ஒரு முறை போடுவதன் மூலம் அதிக மழை மற்றும் அதிக வெயில் காலங்களில் இந்நோய் ஆடுகளை தாக்காதவாறு காப்பாற்ற முடியும்
மேலும் படிக்க....
கால்நடை வளர்ப்பவர்களுக்கு பயனுள்ள இரு செயலிகள்!
அரசு மானியத்துடன் கால்நடை வளர்ப்பு, இதோ உங்களுக்கான தொழில் ஐடியாக்கள்!!
Share your comments