சிக்கன நீர்பாசனத்தையே இன்று பெரும்பாலான விவசாயிகள் விரும்புகிறார்கள். அரசும் இதையே பரிந்துரைக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையினாலும், பருவ நிலை மாற்றங்களினாலும் சொட்டு நீர் பாசனம் (drip irrigation) ஒரு சிறந்த உபாயமாகும். எனவே அரசும் சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வருகிறது.
தற்போது கடலூர் வட்டாரத்தில் காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானியம் அறிவித்துள்ளது. தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் வட்டாரத்தில் தென்பெண்ணை ஆற்றுப் பாசனப் பகுதிகளில் நீர்வள மற்றும் நிலவளத் திட்டத்தை தோட்டக்கலைத் துறை செயல்படுத்த உள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் பயிர்களின் சாகுபடி அதிகப்படுத்துவதுடன், உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இயலும் என்கிறார்கள்.
சொட்டு நீர் பாசன திட்டத்தின் மூலம் வெண்டை, கத்திரி, மிளகாய் போன்ற காய்கறி பயிர்களும், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்வதற்கும், வீரிய ரக காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பின்செய் நேர்த்தி மானியமும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் சொட்டுநீர் பாசன கட்டமைப்பும் அமைத்து கொடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் இணைய மற்றும் அறிந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் கடலூர் செம்மண்டலத்திலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மானியம் பெற தேவையான ஆவணங்கள்
- அரசு மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களுடன், கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேசன் கார்டு நகல்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும்.
- சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அரசு மானியம் வாங்க தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும்.
- அங்கீகாரம் அல்லது உரிமம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றை விவசாயி தேர்வு செய்து, அவர்களை சொட்டு நீர் பாசனம் அமைப்பதை குறித்து நிலத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
- பிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும்.
- இந்த விண்ணப்பம் மாவட்ட நுண்நீர் பாசன தொழில்நுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் அதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர்.
- அதற்கு பின் விவசாயின் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments