கரோனாவின் தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூட (Agriculture Regulatory Outlets) செயல்பாடுகள் வரும் 21 முதல் தொடங்க உள்ளது. இதில் விவசாயிகள் நெல்,பச்சைப் பயிறு, உளுந்து, மணிலா, எள் போன்ற தானியங்களை மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து பயன் பெறலாம்.
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனினும் விவசாயிகளால் தங்களின் விளைப் பொருட்களை விற்பனை செய்ய இயலாமல் சிரமபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை ஏற்று திருவாரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மற்றும் பிற தானியங்கள் உள்ளிட்டவை மறைமுக ஏலம் விற்பனை நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் வித்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 21 முதல் (செவ்வாய்க்கிழமை), திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் (indirect Auction) தொடங்க உள்ளது. எனவே விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை போட்டி விலையில் விற்பனை செய்து, உடனடியாகப் பணம் பெற்று பயன் பெறலாம் என தெரிவித்தார். கரோனா தொற்று, சமூக இடைவெளி, போன்ற காரணங்களினால் ஏலத்தில் பங்கேற்கும் வியாபாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Share your comments