கரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் ‘ட பே’ (TAFE) என்ற தனியாா் டிராக்டா் நிறுவனம் இணைந்து வேளாண் நிலங்களை இலவசமாக உழவு செய்திடும் திட்டத்தை அறிமுக படுத்தி உள்ளனர்.
தமிழக அரசு வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்திருந்தது. வேளாண் பணிகள் தடையின்றி நடப்பதன் மூலம் மட்டுமே அனைவருக்கும் போதிய உணவை தர இயலும் என்பதால் மத்திய அரசும் ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது மாநிலம் முழுவதும் அறுவடை மற்றும் உழவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
களமிறங்கிய ‘ட பே’ நிறுவனம் (Tractors and Farm Equipment (TAFE))
கோடை உழவை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்காக தமிழக வேளாண் மற்றும் வேளாண் பொறியில் துறையுடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக உழவு பணியை செய்து தருகிறது. முதற்கட்டமாக விருதுநகா் மாவட்டத்தில் உள்ள துலுக்கன்குளம், கீழ துலுக்கன்குளம், மாந்தோப்பு, அச்சங்குளம், அழகிய நல்லூா், பிசிண்டி ஆகிய இடங்களில் இலவச உழவுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் பிரதிநிதி கிருஷ்ணகுமாா் கூறுகையில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சேவை செய்யும் நோக்கில் இந்த இலவச உழவு பணியை மேற்கொண்டுள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இம்மாத இறுதிக்குள் 1, 500 ஏக்கா் நிலங்களை உழ இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா்.
இலவசமாக உழவுப் பணி மேற்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது
- 18004200100 என்ற (Tollfree Number) கட்டமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டும் உழவு சேவையைப் பெறலாம்.
- ‘ஜே பாா்ம்’ (J FARM) என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து நீங்கள் இந்த சேவையை தொடரலாம்.
- தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல் பாட்டில் உள்ளதால் விவசாயிகள் ஜூன் 30 வரை இந்த சேவையை பெற விண்ணப்பிக்கலாம்.
இக்கட்டான சூழலில், இது போன்ற சேவையை வழங்கும் இந்நிறுவனத்தின் பணி பாராட்டதக்கது. விவசாய பெருமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.
Share your comments