பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை நவம்பர் வரை நீட்டிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 81.35 கோடி பயனாளிகளுக்கு ஜூலை முதல் நவம்பர் வரை ஒரு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்
கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக உணவு இல்லாமல் எந்த நபரும் பாதிக்கப்படக்கூடாது என்பதை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது.
எனவே, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகளுக்காக பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) 2020-ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது.
இதன் மூலம் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்கள் (அரிசி அல்லது கோதுமை) சுமார் 80 கோடி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகளுக்கு எட்டு மாதங்களுக்கு (ஏப்ரல்-நவம்பர் 2020) வழங்கப்பட்டு, கொரோனா பெருந்தொற்றால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார இடையூறுகளால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் உணவு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது.
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் 2020-ன் கீழ் (ஏப்ரல்-நவம்பர் 2020), மொத்தம் 321 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டு, 305 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் எடுத்து செல்லப்பட்டு, 298 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் (ஒதுக்கீட்டில் 93%) நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன.
நவம்பர் வரை இலவச ரேஷன்
இந்நிலையில், நாட்டின் கொரோனா தொற்று பாதிப்பு நிலையை ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு நெருக்கடியின் போது உதவி செய்யும் பொருட்டு பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் வரும் தீபாவளி வரை (நவம்பர் 2021 வரை) மேலும் நீட்டிக்கப்படும் என கடந்த ஜூன் 7ம் தேதி அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
இதன் படி, ஒரு நபருக்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்கள் (அரிசி அல்லது கோதுமை) ஐந்து மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மொத்தம் 204 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் 80 கோடி தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு ரூ 67,266 கோடி செலவில் வழங்கப்படும்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்படும் உணவு தானியங்களுக்கு கூடுதலாக இவை வழங்கப்படும். இத்திட்டத்தின் முழு செலவையும், மாநில அரசுகள் / யூனியன் பிரதேச அரசுகளின் பங்களிப்பு இல்லாமல் மத்திய அரசே ஏற்கிறது.
மேலும் படிக்க....
3-வது அலையை எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 95% மரணத்தை தடுக்கலாம்: ICMR ஆய்வில் தகவல்
Share your comments