போக்சோ மற்றும் லஞ்ச ஊழல் வழக்கில் இடைநீக்கம் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது என மாநிலத் தகவல் ஆணையம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சாமானியர்களின் வாதம் (The argument of the commoners)
அரசு ஊழியர்களிடையே லஞ்ச ஊழல், கரையான் போலப் பரவிவருவதாக அவ்வப்போது நீதிமன்றங்கள் வேதனைத் தெரிவிக்கின்றன. ஆனால் எது எப்படியிருந்தாலும், அரசு ஊழியர்களையும், லஞ்சத்தையும் பிரித்துப்பார்க்க இயலாத ஒன்று என்பதே சாமானியர்களின் வாதம்.
சிக்கினால் கம்பி
ஏனெனில், லஞ்சம் கொடுக்காவிட்டால் வேலையும் நடக்காது, பல நாட்களுக்கு அலைய விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே, மக்களும் லஞ்சம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். சிக்கினால் கம்பி எண்ண வேண்டி வரும் என்ற போதிலும், சில ஊழியர்கள் தாராளமாக லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு ஊழல் வழக்குகளில் சிக்குபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் சில அரசு ஊழியர்களின் செயல்பாடுகள் மிகவும் வேதனை அளிப்பதாக இருந்து வருகிறது.
இந்நிலையில் பேரூராட்சிகளில் எத்தனை பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிதுது பேரூராட்சிகள் ஆணையத்திடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
பதில் தரவில்லை (No answer)
இதேபோல் போக்சோவில் கைதான நபர்கள் குறித்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியான பதில் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நிதிச்சுமை (Financial burden)
இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, லஞ்ச வழக்குகள், போக்சோ சட்டங்களின் கீழ் நடவடிக்கைக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படும் காலத்தில் அவர்களுக்கு முதல் 90 நாட்களுக்கு 50 சதவீத சம்பளம் பிழைப்பூதியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.90ல் இருந்து 180 நாட்கள் வரை மாத சம்பளத்தில் 75 சதவீதமும், 180 நாட்களுக்கு பின்னர் முழு சம்பளமும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் பிழைப்பூதியம் என்பது அரசுக்கு பெரும் நிதிச்சுமையாக மாறிவிடுகிறது.
அரசுக்குப் பரிந்துரை (Recommendation to the Government)
எனவே ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் அரசு ஊழியர்கள் மீது தொடரப்படும் குற்ற வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும் குற்றம் செய்தவர்களுக்கு அவர்கள் இடைநீக்க காலத்தில் பிழைப்பூதியம் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இதற்காக தமிழ்நாடு சம்பளம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்த ஆணையம் பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments