விவசாய குழுக்களுக்கு சமுதாய ஆழ்துளை கிணறு, பம்பு செட்டுகளுடன் பாசன வசதியை உருவாக்கித் தரும் திட்டத்திற்காக ரூ. 10.19 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சாகுபடிப் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை
இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதன் மூலம் சாகுபடிப் பரப்பை அதிகரித்து, விவசாயிகள் அதிக வருமானம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு (Government of Tamilnadu) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாய குழுக்களை (Farmers Community Groups) உருவாக்கி, பம்பு செட்டுகளுடன் சமுதாய ஆழ்துளை கிணறு (Borewell) அமைப்பதற்கு, ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார் .
முதல் தவணையாக ரூ.6.11 கோடியை ஒதுக்கீடு
அதன்படி, முதற்கட்டமாக, 2020-21 ஆம் நிதி ஆண்டில் 14 மாவட்டங்களில் பாசன வசதி இல்லாத இடங்களில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகள் அடங்கிய 118 விவசாய குழுமங்கள் பயன்பெறும் பொருட்டு, தமிழ்நாடு அரசு ரூ.10.19 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்துவதற்கும், முதல் தவணையாக ரூ.6.11 கோடியை நிதி வழங்குவதற்குமான அரசாணையினை 10.07.2020 அன்று வெளியிட்டுள்ளது.
14 மாவட்டங்கள் தேர்வு
அதன்படி, அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை,புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவள்ளுர், விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் பொதுப்பணித் துறையினால் நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டம் என கண்டறியப்பட்ட 47 குறுவட்டங்களில் 1,233 சிறு, குறு ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அவற்றின் மூலம் கிடைக்கும் நீரினை விவசாயிகளுக்கிடையே பங்கிட்டுப் பயன்பெறும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், குழு உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், குழாய் கிணறு / ஆழ்துளை கிணறு / திறந்தவெளி கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு சூரிய சக்தி / மின் சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் அமைத்தல், பாசன நீரினை வீணாக்காமல் நேரடியாக வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
விலை விபரம் - Tarrif Details
அரசாணையின்படி, இத்திட்டத்தின் கீழ், 90 மீட்டர் ஆழத்தில் குழாய் கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ. 3 இலட்சமும், 100 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ.1.1 இலட்சமும், 20 மீட்டர் ஆழத்தில் திறந்தவெளி கிணறு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.6.5 இலட்சமும், சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.3.25 இலட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், நீர் விநியோக குழாய்கள் நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.
விவசாய குழுக்களுக்கான விதிமுறைகள் (Guidelines for Farmers)
-
நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கு மேல் கிணறு அமைக்கவோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைக்கவோ குழு உறுப்பினர்கள் விரும்பினால், அதற்கான கூடுதல் செலவினை அக்குழுக்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
-
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாய குழுக்கள் கூட்டுறவு சங்க வழிமுறைகளின்படி தங்கள் குழுக்களை பதிவு செய்திருக்க வேண்டும்.
-
இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் பாசன வசதியின் மூலம் கிடைக்கும் நீரினை முறையாக இவ்விவசாய குழு உறுப்பினர்கள் அனைவரும் சாகுபடிப் பரப்புக்கேற்றவாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
-
மேலும், பாசன அமைப்புகளை பராமரிப்பு மற்றும் அதற்கான மின்சார செலவினை இவ்விவசாய குழு உறுப்பினர்களே பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
-
மேலும், இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் நிலங்களில் நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கி, நவீன நுண்ணீர்ப்பாசன அமைப்புகளை முழு மானியத்தில் அமைத்துத் தரப்படும்.
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக, 2020-21 ஆம் ஆண்டில், 1,233 சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து சாகுபடியினை மேற்கொண்டு அவர்களின் பொருளாதார நிலை மேம்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. தேவைக்கேற்ப இத்திட்டத்தை இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
மேலும் படிக்க..
ஆவின் முகவராக எளிய வாய்ப்பு - ஆட்டோ, டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அழைப்பு!
பெண்களே தொழில் தொடங்க விருப்பமா? - ரூ.2 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அள்ளித்தரும் அற்புதமான ஐந்து திட்டங்கள்!
Share your comments