திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 3000க்கும் அதிகமானோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, தமிழ்நாடு திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்ந நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் தான் திமுக. இத்தகைய சிறப்பு மிக்க ஒரு இயக்கத்தில் நீங்கள் உங்களை இணைத்துக் கொண்டுள்ளீர்கள். அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் இருந்த இயக்கத்தில் இணைந்த உங்களையெல்லாம் வாழ்த்தி வரவேற்கிறேன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற போராடியவர் கலைஞர்.
திமுக இளைஞர்களால் தொடங்கப்பட்ட இயக்கம். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுக. இன்று திமுக தலைவராக உங்களில் ஒருவனாக, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் பதிமூன்று வயதில் கட்சி பணியை துவங்கினேன்.
அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு போட்டி தேர்வுகளில் தமிழ் கட்டாயம், ஆலயங்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை, அரசு அதிகாரிகள் தமிழில் கையொப்பமிடுதல் என செயல்படுத்தி உள்ளோம். இலங்கையிலிருந்து வந்த தமிழ் உறவுகளுக்கு 317 கோடி ரூபாய்க்கு சமூக பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி இருக்கக்கூடிய ஆட்சிதான் திமுக. இலங்கை அகதிகள் முகாம்களை, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் சூட்டிய இயக்கம் தான் திமுக.
தமிழ்நாடு அரசுத்துறை பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது; தெற்காசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க
Share your comments