Bilingual policy
தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுப்படுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்ளை செயல்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வி ஆணையர் அதனை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு அரசு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி துவங்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக் கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது.
தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்புமொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது. 2006 ஆம் ஆண்டின் தமிழ்நாடு (தமிழ் மொழி கற்கும்) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்தம் தாய்மொழியையும், விருப்பப்பாடமாகப் படித்து, தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
எனவே, தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுப்படுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்பவேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக இன்றைய செய்தித்தாள்களில் 3 மொழிக்கொள்கை அமல்படுத்தி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை தமிழக அரசு மறுத்துள்ளதோடு அதற்கான விளக்கமும் அளித்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுப்படுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தனது அறிக்கையின் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க
Share your comments