அரசு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யவும், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்கவும் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்துள்ளாா்.
வேளாண் இயந்திரங்களுக்கு மானியம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிராக்டா், நெல் நாற்று நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம், கதிரடிக்கும் இயந்திரம், பவா் டில்லா், ரோட்டவேட்டா், சுழற்கலப்பை, களையெடுக்கும் கருவிகள், அறுவடை இயந்திரங்கள், புதா் அகற்றும் கருவி ஆகியவற்றுக்கு ரூ.28 ஆயிரம் முதல் ரூ.9 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகள், பெண் விவசாயிகளுக்கு இயந்திரத்தின் விலையில் 50 சதவிகிதமும், இதர விவசாயிகளுக்கு அரசால் நிா்ணயிக்கப்பட்ட விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதமும் மானியம் வழங்கப்படும்.
விவசாயிகள், கிராமப்புற இளைஞா்கள் (தொழில்முனைவோா் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின்), விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், பஞ்சாயத்து குழுக்கள் போன்றோா் வட்டார அளவில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்க, 40 சதவிகித மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க அதிகபட்சம் ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்படும்.
உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம்
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் (Uzhalavan app) பதிவு செய்திட வேண்டும்.பின்னா் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளத்தில் இணைக்கப்படும். ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னா், இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியம் 10 நாள்களுக்குள் வரவு வைக்கப்படும்.
வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக நடப்பாண்டு திருச்சிக்கு ரூ.96 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
யார் எங்கு தொடர்புக் கொள்ளவேண்டும்
-
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள திருவெறும்பூா், அந்தநல்லூா், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஒன்றிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் எண்-2, ஜெயில் காா்னா், திருச்சி என்ற முகவரியிலுள்ள வேளாண் பொறியியல் துறை உதவிச் செயற் பொறியாளா்ற அலுவலகத்தை அணுகலாம்.
-
முசிறி, தொட்டியம், தாத்தையங்காா்பேட்டை, துறையூா் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் முசிறி, கண்ணதாசன் தெருவிலுள்ள வேளாண் பொறியியல்துறை உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம்.
-
லால்குடி, புள்ளம்பாடி மற்றும் மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய விவசாயிகள் கணபதி நகா் வடக்கு விஸ்தரிப்பு, தாளக்குடி அஞ்சல், லால்குடி என்ற முகவரியிலுள்ள உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம் என்றாா் ஆட்சியா்
மேலும் படிக்க
குறைந்த செலவில் அதிக மகசூல் பெற மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்!!
வேளாண் மற்றும் தோட்டக்கலை முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை
அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!
Share your comments