ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், எலெக்ட்ரிக் வாகன தேவைகளை எதிர்கொள்ள மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், இரு நிறுவனங்களும் பல்வேறு பிரிவுகளில் இணைந்து செயல்பட உள்ளன.
கூட்டணியை தொடர்ந்து ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா மற்றும் NYX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் மஹிந்திரா நிறுவனத்தின் பிதாம்பூர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பத்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், லூதியானாவை சேர்ந்த ஆலையில் தொடர்ந்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
வாகனங்கள் உற்பத்தி மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனத்தின் பியூஜியோட் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு எலெக்ட்ரிக் திறன் வழங்க மஹிந்திரா நிறுவனத்திற்கு ஹீரோ எலெக்ட்ரிக் உதவ உள்ளது. கூட்டணி மூலம் இரு நிறுவனங்களும் செலிவீனங்களை கட்டுப்படுத்துவது, நேரத்தை மிச்சப்படுத்துவது, அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சர்வதேச எலெக்ட்ரிக் வாகன சூழலில் அறிவுசார் பங்களிப்புகளை பகிர்ந்து கொள்வது என பலவிதங்களில் சம அளவில் பயன்பெற முடியும் என ஹீரோ எலெக்ட்ரிக் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
"இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் ஹீரோ எலெக்ட்ரிக் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ஹீரோ எலெக்ட்ரிக் மஹிந்திரா குழுமத்துடன் கூட்டணி அமைப்பதை அறிவித்திருகிறது. மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்தும் நோக்கில் எலெக்ட்ரிக் திறன் கொண்ட மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது."
"இரு முன்னணி நிறுவனங்களும் இணைந்து வளர்ந்து வரும் தேவைகளை எதிர்கொள்ள, உற்பத்தி திறனை மேம்படுத்த, நாட்டின் பல பகுதிகளில் கால்பதிக்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம், மஹிந்திராவின் தலைசிறந்த விற்பனை மையங்களை பயன்படுத்திக் கொள்ள உள்ளோம். நீண்ட கால கூட்டணி மூலம் அடுத்த சில ஆண்டுகளில் புதிய வாகனங்கள் வளர்ச்சிக்கு இரு நிறுவனங்களின் அதீத அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். வரும் காலங்களில் அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் ஆர்வமாக இருக்கிறோம்" என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
தமிழகம்: எப்போது கொரோனா 3-வது அலை உச்சத்தை தோடும்? கவனம்
PM Kisan திட்டம்: ஆண்டுக்கு 6000த்திற்கு பதில் 8000 வழங்க வாய்ப்பு!
Share your comments