விவசாய பயிர்களை அழித்து வரும் வெட்டுக்கிளிகளை 'ட்ரோன்' (Drone)உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து ஒழித்து வருகிறது ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானை தொடர்ந்து இந்தியாவுக்குள் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதில், அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாநிலமாக ராஜாஸ்தான் உள்ளது. இங்கு 20 மாவட்டங்களில் சுமார் 90,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளன.
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு
இந்திலையில், ட்ரோன் பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம்(Ministry of Civil Aviation)அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சோமு அருகேயுள்ள சமோத் பகுதிகளில் இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
வாடகை ட்ரோன்கள்
இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள ராஜாஸ்தான் மாநில வேளாண்துறை ஆணையர் ஓம் பிரகாஷ், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ட்ரோன் மூலம் 10 லிட்டர் பூச்சக்கொல்லி மருத்தினை வான்வளியில் இருந்து தெளிக்க முடியும், தற்போது வெட்டுக்கிளிகளை அழிக்க, வாடகை ட்ரோனை பயன்படுத்தும் நிலையில், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்போம். வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளிளும், கரடு முரடான பாதைகள் மற்றும் உயரமான பகுதிகளில், ட்ரோன்கள் பலனளிக்கும். ஒரு ட்ரோன், 15 நிமிடத்தில், கிட்டத்தட்ட 2.5 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்துவிடும் என்று அவர் கூறினார்.
மேலும், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ட்ரோன்கள் பறக்கப்படாது என்றும், கடுமையான காற்று, மழை, தூசி போன்ற மோசமான வானிலை நிலைகளிலும் அவை பயன்படுத்தப்படாது என்றார்.
தென்னிந்திய மாநிலங்களுக்கு எச்சரிக்கை
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடர்பாக வேளாண் பூச்சி வளங்களின் தேசிய பணியக ( NATIONAL BUREAU OF AGRICULTURAL INSECT RESOURCES) தலைமை விஞ்ஞானி ஷைலேஷா கூறுகையில், வரும் 30ஆம் தேதி வரை காற்றின் திசை தெற்கு நோக்கியே இருக்கும். எனவே வெட்டுக்கிளிகள் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மே 30ஆம் தேதிக்கு பிறகு காற்றின் திசை வடக்கு நோக்கி நகரும் என்றும் கூறினார்.
இதனால் தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வெட்டுக்கிளிகள் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அம்பன் புயல் தாக்கத்தால் காற்றில் திசையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாகவும் ஷைலேஷா எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவில் உஷார் நிலை
மகாராஷ்டிர - கர்நாடக எல்லையில் இருக்கும் மாவட்டங்களான கொப்பல், விஜயபுரா, பிடார், யத்கிர் ஆகியவற்றில் வசிக்கும் விவசாயிகளுக்கு, வெட்டுக்கிளி பயிர் தாக்குதலை எதிர்கொள்ளவது தொடர்பாக மாநில அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதாவது ட்ரம்கள் மூலம் தொடர்ந்து ஒலி எழுப்பியும், வேப்பிலை மூலப்பொருள் கொண்ட பூச்சி மருந்துகள் உள்ளிட்டவற்றை தெளித்தும் பாதுகாக்குமாறு கூறியுள்ளது. ஒருவேளை விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் நுழைந்துவிட்டால் குளோரோபைரோபோஸ் போன்ற வீரியமிக்க பூச்சி மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் பிசி பட்டில் கூறுகையில், பாலைவன வெட்டுக்கிளிகள் கர்நாடகாவிற்கு வர வாய்ப்பில்லை. பிடார் எல்லையில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் இந்த வெட்டுக்கிளிகள் மையம் கொண்டுள்ளன. இவற்றை எதிர்கொள்ள மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாவட்ட, தாலுகா அளவில் அனைத்து அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கையாள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசி பாட்டில் தெரிவித்தார்.
Share your comments