ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் அதிக மகசூல் தரும் ஆடுதுறை-51 நெல் ரகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தானாகவே எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த நெல் ரகத்துக்கு பூச்சிக்கொல்லி மருந்து தேவை இல்லை.
சமீபத்தில் அதிக ஆலைத்திறனும், மகசூலும் கொடுக்கக்கூடிய ‘ஆடுதுறை-51’ ரகம் கண்டுபிடிக்கப்பட்டன. விவசாயிகளின் கதாநாயகனாக திகழ்ந்து வரும் இந்த புதிய நெல் ரகத்தை பற்றி தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் (ஆடுதுறை) இயக்குனர் வெ. ரவி கூறியதாவது: -
நெல் ரகங்களிலேயே குறிப்பிட்டு சொல்லக்கூடிய சம்பாவுக்கு ஏற்ற விளைச்சலை கொண்ட ரகம் இது. பி.பி.டி.5204 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி தான் இந்த ரக நெல்லின் பெற்றோர். இந்த 2 ரகத்தையும் ஒட்டு கட்டி உருவாக்கிய புதிய ரகம் தான், ‘ஆடுதுறை-51’. நீண்ட சன்ன ரகம் என்றும் அழைக்கலாம். சாப்பாட்டு மற்றும் பலகாரத்துக்கு ஏற்ற நல்ல நெல் ரகம் இதுவாகும். இதன் வயது 155 முதல் 160 நாட்கள் ஆகும்.
தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களிலும், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களிலும் இந்த நெல் ரகங்களை தாராளமாக சாகுபடி செய்ய முடியும். உயர்ந்து நேராக வளரும் நெல் ரகமான ‘ஆடுதுறை-51’, விவசாயிகளுக்கு அதிக மகிழ்ச்சி தரக் கூடியதாகும்.
ஒரு ஹெக்டேருக்கு 6 ஆயிரத்து 500 கிலோ முதல் 7 ஆயிரம் கிலோ வரை மகசூல் அளிக்கக்கூடியது. அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கிலோ வரை மகசூல் தரவல்லது. விளைச்சலின் வித்தியாசமான கெட்டிக்காரன் தான் இந்த ‘ஆடுதுறை-51’. பூச்சிவெட்டு போன்ற நோய் தாக்குதலை தானாகவே சமாளிக்கவல்ல எதிர்ப்பு சக்தி மிக்கது. பூச்சிக்கொல்லி மருந்து தேவைப்படாது. 70.3 சதவீதம் ஆலைத்திறன் கொண்டது (அதாவது 100 கிலோ நெல்லுக்கு 70.3 கிலோ அரிசி கிடைக்கும்). அந்தவகையில் அதிக ஆலைத்திறன் கொண்ட சி.ஆர்.1009 ரக நெல்லுக்கு இணையானது தான் இந்த ‘ஆடுதுறை-51’.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த ‘ஆடுதுறை-51’ நெல் ரகம், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் ஆகஸ்டு மாதம் நாற்று நடுவதற்கு மிக ஏற்ற ரகம். இந்த புதிய நெல் ரகமானது சமையலுக்கு மிகவும் உகந்தது என்பதால் விரைவிலேயே மக்களின் மனதில் அபிமானம் பெற்றுவிடும்.
Share your comments