நம்மில் இன்று பெரும்பான்மையான மக்கள் அடிக்கடி பேசப்படும் விஷயம் ஆரோக்யம். ஆனால் இது நமக்கு மட்டுமானது அல்ல. நம்மை சுற்றியுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும். உயிர் வாழ்வதற்கு ஆதாரமான வேளாண்மைக்கும் இது பொருத்தும். நமது அரசும் ஸிரோ பட்ஜெட் குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறது.
அதிக பொருட்ச் செலவு இல்லாமல் ஆரோக்கியமான வேளாண்மை செய்ய அருமையான ஆலோசனைகள்:
1. முதலில் இயற்கை விவசாயத்தினை தொடங்குவதற்கு முன்பு நிலத்தினை தயார் படுத்த வேண்டும். முன்பு பயன்படுத்திய ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் மக்காத பாலிதீன் பேப்பர்களை உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தும் முன்பு மண்ணின் மலட்டு தன்மையை அகற்ற வேண்டும். அதற்கு தக்கைப்பூண்டு செடிகளை வளர்த்து, அதன் மூலம் இழந்த மண்ணின் தன்மையை பெற இயலும் என நிரூபிக்கப் பட்டுள்ளது.
3. நிலம் தாழ்வான பகுதியில் இருப்பின் வயல்வெளிகளின் வரப்பை உயர்த்த வேண்டும். அப்பொழுது தான் மழைக்காலங்களில் மற்ற வயல்களில் பயன்படுத்தப் பட்ட ரசாயனப் பொருட்கள் மழைநீருடன் விளை நிலங்களில் வருவது தடுக்கப்படவேண்டும்.
4. முற்காலத்தில் பயன்படுத்திய நாட்டு ரக விதைகளையே பயன்படுத்துவது நிலத்திற்கு ஆரோக்கியம்.
5. முதலில் அதிக இடுபொருள்களை இட்டு, அதிக மகசூல் என்பதைவிட குறைந்த செலவில் சரியான இடுபொருட்கள் இட்டு சராசரியான மகசூல் என்ற இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.
6. பெருகி வரும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மின் பற்றாக்குறை போன்றவற்றை கருத்தில் கொண்டு சிக்கன நீர் பாசனமான தெளிப்பு நீர், சொட்டுநீர் பயன் படுத்துவது சால சிறந்தது.
7.வயல்வெளிகளில் முளைத்து வரும் களைகளை நீக்க பண்டைய முறையான மூடாக்கு முறைகளை பயன்படுத்தலாம்.
8.வேளாண்மையில் நமக்கு நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் என இரு வகைகளாக பிரிக்கலாம். இலை, தழைகளை கொண்டு நாமே பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூச்சிவிரட்டிகளை தயாரித்து தீமை செய்யும் பூச்சிகளை விரட்டலாம்.
9. அனைத்து விவசாகிகளும் உப தொழிலாக கால்நடைகள் வளர்ப்பில் ஈடு பட வேண்டும். அதிலும் குறிப்பாக நாட்டு ரகங்களை தேர்வு செய்தல் மிகவும் நல்லது.
10.பருவ நிலைக்கு ஏற்ற பயிர்களை தேர்வு செய்து நட வேண்டும். அதன் பின்னர் பண்டைய முறைப்படி பயிர்சுழற்சி செய்ய வேண்டும்.
11. ஆண்டு முழுவதும் வேளாண் செய்வதை தவிர்த்து, கோடையில் உழுது குறிப்பிட காலங்களுக்கு நிலத்தை காலியாக விட வேண்டும்.
12. கோடைக்காலங்கள் அல்லது அறுவடை முடிந்த வயல்களில் கால்நடைகளை பட்டி போட்டு மண்ணின் தரத்தை உயர்த்தவேண்டும்.
13. கடைசி உழவை குறுக்குவாக்கில் உழுவதின் மூலம் மழைக் காலங்களில் நிலத்தில் நீர் தேங்கி மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும்.
14. மண்ணின் வளத்தை உயர்த்த பசுந்தாள் உரங்களை வளர்த்து பூக்கும் முன்பே மடக்கி உழவு செய்து விட வேண்டும்.
15. கரும்பு போன்ற பயிர்களை அறுவடை செய்த பிறகு அதன் தோகைகளை தீயிடாமல் மக்க வைத்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது மண்ணிற்கு தேவையான ஊட்டம் மற்றும் ஈரப்பதம் சேமிக்க படுவதுடன், நன்மை செய்யும் எண்ணற்ற உயரினங்கள் மடிவது குறையும்.
16. வயல்வெளிகளில் நீர்பாய்ச்சும் போது தேங்கி நிற்கும் அளவிற்கு பாய்ச்ச கூடாது. இது பயிர்களின் வேர் சுவாசத்தை பாதிக்கும்.
17. பார்கள் அமைக்கும் போது வடிகால் வசதிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
18. பயிர் சுழற்சி செய்யும் போது வாழை,பருத்தி,பப்பாளி போன்ற பயிர்களை அற்புறபடுத்தாமல் நிலத்திலேயே மடக்கி உழுதல் வேண்டும்.
19. பயிர்கள் அதிக மகசூல் தரவும், போதிய சூரிய ஒளி பெறவும் சாலை முறையில் நடவு செய்யவேண்டும்.
20. கிணறு மற்றும் மின்கம்பங்களின் அருகில் நீண்டகால வயதுடைய மரக்கன்றுகள் நடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேலே கூறிய ஆலோசனைகளை நடைமுறை படுத்தினால் இழந்த வளத்தை மீட்டு ஆரோக்கியமான வேளாண்மை செய்ய முடியும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments