கூத்தாநல்லூர் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் நடப்பு ஆண்டு குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது இந்த பகுதியில் சம்பா, தாளடி அறுவடை பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல் சாகுபடிக்கு பின்னர் மாற்றுப்பயிராக உளுந்து, பயறு சாகுபடி பணிகளை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
உளுந்து சாகுபடி (Black gram Cultivation)
சாகுபடி செய்யப்படும் உளுந்து, பயறு பயிர்கள் பல இடங்களில் வயல்களில் பச்சை பசேலென வளர்ந்து செழிப்பான நிலையில் காணப்படுகிறது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், வடபாதி, பழையனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பரவலாக உளுந்து, பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘உளுந்து, பயறு சாகுபடி பணிகளை இந்த ஆண்டு சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு போதிய அளவு ஆற்றில் தண்ணீர் வருகிறது. இயற்கை சூழலும் நன்றாக உள்ளது. இதனால் வயல்களில் தேவையான ஈரப்பதம் தொடர்ந்து இருந்து வருகிறது. உளுந்து, பயறு வகை பயிர்கள் எதிர்பார்த்ததை விட செழிப்பாக வளர்ந்து வருகிறது.
இதனால் இந்த ஆண்டு உளுந்து, பயறு சாகுபடியில் அதிக அளவில் மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றனர்.
மேலும் படிக்க
பருத்தி சாகுபடியில் ஆர்வத்துடன் செயல்படும் விவசாயிகள்!
விலை உயர வாய்ப்புள்ளதால் மக்காச்சோளத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்!
Share your comments