கொரோனா வைரஸ் நெருக்கடியால், பல துறைகள் முடங்கி கிடக்கும் நிலையில், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. சில அடிப்படை பிரச்னைகளுக்கு மட்டும் தீர்வு காணப்பட்டால், 2020 - 2021ம் நிதியாண்டில், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி, மேலும் வளர்ச்சியை சந்திக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். கொரோனா வைரசின் இரண்டாம் அலை (Corona Virus Second Wave) தீவிரமடைந்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு (Lockdown) கட்டுப்பாடுகளால், பல தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய உச்சம்
எனினும் இந்த காலத்தில், நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாய துறை, நல்ல வளர்ச்சியை சந்தித்துள்ளது. வேளாண் ஏற்றுமதி புதிய உச்சங்களை தொட்டுள்ளது. கடந்த 2019 - 2020ம் நிதியாண்டில் வேளாண் ஏற்றுமதி, 8 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. பின், 2020 - 2021ம் நிதியாண்டில் ஏற்றுமதியில் சற்று வளர்ச்சி தென்பட்டது. கடந்த 2020 ஏப்ரல் முதல், 2021 பிப்ரவரி வரையிலான காலத்தில், 2.67 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி (Export) செய்யப்பட்டன. இது, 18.4 சதவீத வளர்ச்சி. இதே நிலை தொடர்ந்தால், இந்த நிதியாண்டில் வேளாண் ஏற்றுமதி மேலும் வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி
கடந்த, 2020 - 2021ம் நிதியாண்டின் ஏற்றுமதியில், கோதுமை 672 சதவீதமும், தாவர எண்ணெய் 258 சதவீதமும், பிற தானியங்கள் 245 சதவீதமும், வெல்லப்பாகு 141 சதவீதமும், பாஸ்மதி அல்லாத அரிசி 132 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மதிப்பு அடிப்படையில் கடந்த இரு நிதியாண்டுகளில், கடல் பொருட்கள் (Sea food), பாஸ்மதி அரிசி, பாஸ்மதி அல்லாத அரிசி, மசாலா மற்றும் எருமை இறைச்சி உள்ளிட்டவை அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இதைத்தவிர உலகம் முழுதும் உள்ள, 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
பிரேசில், பப்புவா நியூ கினியா, சிலே, டோகோ, செனேகல், மலேஷியா, மடகாஸ்கர், ஈராக், வங்கதேசம், மொசாம்பிக், வியட்நாம், தன்சானியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரிசி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேற்காசிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பருப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரிப்பால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்தியாவின் வேளாண் பொருள் ஏற்றுமதி திறனை வலுப்படுத்துவதற்கு, ஏ.பி.இ.டி.ஏ., எனப்படும் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
பிரச்னை
பண்ணை, இறைச்சி பொருட்கள், பால் பொருட்கள், மலர் வளர்ப்பு பொருட்கள், தோட்டக்கலை (Horticulture), மருத்துவ தாவரங்கள் போன்றவற்றின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக இந்த ஆணையம் செயல்படுகிறது. விவசாயிகளின் வருவாயை (Farmers income) அதிகரிக்க, வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அடுத்த ஆண்டிற்குள், வேளாண் பொருள் ஏற்றுமதியை இரட்டிப்பாக உயர்த்த வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும், இதில் சில சிக்கல்கள் உள்ளன. அறுவடைக்கு (Harvest) பின் அதிக இழப்பு ஏற்படுகிறது.
இதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். குளிர் சாதன சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், உணவு பொருட்கள் வீணாகின்றன. அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டால், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி மேலும் வளர்ச்சி அடைவதில் எந்த சந்தேகமும் இருக்காது என, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க
புதிதாக 120 உழவர் சந்தைகள் அமைக்கப்படும்! அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு!
தொடங்கியது முன்பட்ட குறுவை சாகுபடி! மும்முனை மின்சாரம் வேண்டி விவசாயிகள் கோரிக்கை!
Share your comments