இந்திய தடுப்பூசி இயக்கத்தை மக்கள் நடத்தி வருகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: நமது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. இனிமேல், 12 முதல் 14 வயதுள்ளவர்கள் தடுப்பூசி போடுவதற்கு தகுதி பெறுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பூஸ்டர் டோஸ் போட தகுதி பெறுகிறார்கள். அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
இந்தியாவின் தடுப்பூசி திட்டம் (Vaccination Program of India)
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கமான இந்தியாவின் தடுப்பூசி திட்டம் அறிவியல் பூர்வமானது. நமது குடிமக்களை காக்கவும், கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தை பலப்படுத்தவும், தடுப்பூசி உருவாக்கும் பணியை 2020க்கு முன்னர் துவங்கினோம். இந்த தருணத்தில், நமது விஞ்ஞானிகள் மற்றும் தனியார் துறையினர் உயர்ந்து நிற்கும் தருணம் பாராட்டுக்குரியது. 2020 பிற்பாதியில், மூன்று தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சென்று, நமது குடிமக்களை பாதுகாக்கும் அவர்களின் முயற்சிகள் குறித்து கேட்டறிந்தேன்.
கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தில் முன்களத்தில் நிற்பவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கும் வகையில், 2021ல் டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பிறகு 2021 மார்ச் மாதம் , இணை நோய்களுடன் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவக்கப்பட்டது.
பின்னர், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தடுப்பூசியை விரும்பிய அனைவருக்கும் இலவசம் என்பதில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
இன்று 180 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி போடப்பட்டதில், 15 முதல் 17 வயதுள்ளவர்கள் 9 கோடி பேர், 2 கோடிக்கும் அதிகமான பூஸ்டர் போடப்பட்டுள்ளது. இது, கோவிட்டிற்கு எதிராக நமது குடிமக்களுக்கு முக்கியமான பாதுகாப்பு கவசமாக அமைகிறது.
இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மக்களால் நடத்தப்படுகிறது. மற்ற நாடுகளை போல் அல்லாமல், தடுப்பூசி போடுவதற்கு பலர் தயங்கியதை பார்த்துள்ளோம். ஆனால், தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள், மற்றவர்களையும் விரைவாக போட்டு கொள்ளும்படி அறிவுறுத்தினர். இதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு மாநில அரசுகள் அளிக்கும் ஆதரவு பாராட்டுக்குரியது. மலை பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்கள், அங்கு சுற்றுலா முக்கியத்துவம் கருதி, பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போட்டு உள்ளது. பல பெரிய மாநிலங்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
மேட் இன் இந்தியா தடுப்பூசிகள் (Made in India Vaccines)
உலகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகள், கோவிட்டிற்கு எதிரான உலகத்தின் போராட்டத்தை வலிமையாக்கி உள்ளது பெருமை அளிக்கிறது. இன்று, இந்தியாவில் ஏராளமான மேட் இன் இந்தியா தடுப்பூசிகள் உள்ளன. பல முறையான ஆய்வுகளுக்கு பிறகு, மற்ற தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மோசமான பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், கோவிட் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி: மத்திய அமைச்சர் தகவல்!
Share your comments