கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், 'இன்டோமெதசின்' என்ற மருந்துக்கு செயல் திறன் உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. லேசான, மிதமான கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் 'ஸ்டிராய்டு' மருந்துக்கு பதிலாக, வைரஸ் எதிர்ப்பு மருந்தான இன்டோமெதசின் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆய்வை, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., மேற்கொண்டது. சென்னை பனிமலர் மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த ஆய்வுக்கு, சென்னை ஐ.ஐ.டி., பகுதி நேர ஆசிரியரும், டாக்டருமான ராஜன் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
இன்டோமெதசின் (Indomethacin)
இன்டோமெதசின் மருந்தின் செயல் திறன் குறித்து, டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன், ஐ.ஐ.டி., பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் அளித்த பேட்டி: இன்டோமெதசின், 1960களில் இருந்து அழற்சி தொடர்பான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து. சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும். இத்தாலி, அமெரிக்க விஞ்ஞானிகளால், அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்த போதும், இந்திய ஆய்வாளர்கள் தான் இன்டோமெதசினின் செயல் திறனை, மருத்துவ பரிசோதனை வாயிலாக முதன்முறையாக உறுதி செய்துள்ளனர்.
நல்ல முன்னேற்றம் (Good Results)
இம்மருந்தை, அனைத்து விதமான உருமாறிய தொற்றுக்கும் பயன்படுத்தியதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. முதல், இரண்டாம் அலையில், தலா ஒரு சோதனை முயற்சி மேற்கொண்டதில், இரண்டு முடிவுகளும் ஒரே மாதிரியாக இருந்தன.ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 210 நோயாளிகளில், இன்டோமெதசின் எடுத்த 103 பேருக்கு, ஆக்சிஜன் தேவைப்படவில்லை. மாற்று மருந்து எடுத்த நோயாளிகளில் 20 பேருக்கு, ஆக்சிஜன் தேவைப்பட்டது. இன்டோமெதசின் எடுத்தவர்கள், மூன்று அல்லது நான்கு நாட்களில், அனைத்து அறிகுறிகளில் இருந்தும் மீண்டனர்.
மேலும் கல்லீரல், சிறுநீரக செயல்பாடுகளில் எதிர்மறையான முடிவுகள் வரவில்லை. மாற்று மருந்து எடுத்த நோயாளிகளில் பாதி பேருக்கு, பல்வேறு அசவுகரியங்கள் ஏற்பட்டன. இன்டோமெதசின் நோயாளிகளைப் பொறுத்தவரை உடல் சோர்வு மட்டுமே ஏற்பட்டது. ஆய்வு முடிவுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும் அனுப்பியுள்ளோம். கொரோனா சிகிச்சை முறையில், இன்டோமெதசினை பயன்படுத்துவர் என உறுதியாக நம்புகிறோம்.
மேலும் படிக்க
Share your comments