மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து விவசாயிகளின் "டெல்லி சலோ" போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய திருத்தங்களுடன் புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் விவசாயிகளையும், சில்லரை வியாபாரிகளையும் பாதிக்கும் எனக் கூறி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி கோட்டையை நோக்கி சென்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
பஞ்சாபிலிருந்து ஹரியாணா வழியாக டெல்லி வந்த விவசாயிகளை போலீசார் தடுப்புகளை அமைத்தும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். இதனிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியதைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி புராரியின் நிரங்கரி சமகம் திடலில் அமைதியான வழியில் போராட்டத்தை நடத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.
காவல்துறையினர் அளித்த தகவலின்படி புராரி திடலில் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆதரவு அளிக்கும் வகையில் கிசான் சங்கர்ஷ் குழுவைச் சேர்ந்த விவசாயிகளும் நேற்று அமிர்தசரஸ் பகுதியிலிருந்து ஹரியாணா வழியாக டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். இரவில் ஹரியாணாவில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் இன்று டெல்லி போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான உணவுப் பொருள்களுடன், டிராக்டர், பேருந்து, இருசக்கர வாகனங்களில் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாயிகள் படையெடுத்துள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் ''டெல்லி சலோ'' (Delhi Chalo) போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 26-ம் தேதியில் முதல் இன்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
அடுத்த புயல் புரெவி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 1 முதல் கனமழைக்கு வாயப்பு!!
விவசாயிகளே வந்துருச்சா..? இந்த ஆண்டின் கடைசி ரூ.2000/- தொகுப்பு!
உரச்செலவை குறைப்பது எப்படி? வழிகாட்டுகிறது உழவர் பயிற்சி நிலையம்!
Share your comments