முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edappadi Palanisamy) இன்று சேலம் நெடுஞ்சாலை நகர் முகாம் அலுவலகத்தில் சேலம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் (women's self-help groups) உற்பத்தி பொருட்கள் இணைய விற்பனைக்கான 'சேலம் மதி (Salem Madhi)' என்ற புதிய செயலியினை தொடங்கி வைத்தார். இந்த செயலியின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை எளிதில் விற்க முடியும்.
கடன் உதவி:
சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 12 ஆயிரத்து 487 சுய உதவி குழுக்களும், நகர்ப்புறப் பகுதிகளில் 6,894 சுய உதவி குழுக்களும் என மொத்தம் 19 ஆயிரத்து 381 சுய உதவி குழுக்கள் (self-help groups) உள்ளன. இதில் 3 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இச்சுய உதவிக்குழுக்களின் மொத்த சேமிப்புத் தொகை (Savings) ரூ.217 கோடி ஆகும். சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த (2020-21) நிதியாண்டில் ரூ.958 கோடி கடன் (Loan) வழங்கப்படுகின்றது. சுய உதவிக் குழுக்களுக்கு, குழு ஆரம்பித்தவுடன் 3 மாதங்களுக்கு பிறகு வங்கிகளால் தர மதிப்பீடு செய்யப்பட்டு, ஆதார நிதியாக ரூ.15 ஆயிரம் வீதம், ஒவ்வொரு புதிய குழுவுக்கும் வழங்கப்படுகிறது. இந்த ஆதார நிதியானது அவர்களை ஊக்குவிப்பதற்கும் சேமிப்பின் மூலம் உள்கடன் பெறுவதற்கும் வழிவகை செய்யப்படுகின்றது. இந்த ஆண்டு இதுவரை ரூ.1.50 கோடி ஆதார நிதியாக மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சந்தைப்படுத்தல்:
சுய உதவி குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்களை விற்பனையை மேம்படுத்தும் பொருட்டு, மாநில - மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு, தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 2005-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலான வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுய உதவி குழுக்களின் உற்பத்தி (Production) பொருட்களை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மாவட்ட அளவில் உள்ள வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்கள் அனைத்தும் மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அச்சங்கங்கள் சுய உதவி குழுக்கள் செய்யும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு (Marketing) பெரிதும் உதவிபுரிகின்றன. மேலும், மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை இளைஞர்களிடையே பிரபலப்படுத்துவதற்கு கல்லூரி சந்தைகள் மிக முக்கியமான சந்தை வாய்ப்பாக உள்ளது.
சேலம் மதி செயலி
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்திடவும், அப்பொருட்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்திடவும், விளம்பர உத்தியாகவும், சுய உதவிக் குழுக்களின் தற்சார்பு பொருளாதாரத்தை (Self-sufficient economy) மேம்படுத்திடவும், சேலம் மதி என்ற விற்பனை செயலி (Sales App) அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றைய தினம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இச்செயலி சேலம் மாவட்ட பொதுமக்களுக்கும் மகளிர் உதவிக் குழுக்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாக விளங்கும். இதில், சேலம் மாவட்டத்திலுள்ள 470 மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்திப் பொருட்களான 2,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் இந்த விற்பனை செயலியில் பதிவேற்றம் (Upload) செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை இந்த 'சேலம் மதி' செயலி மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும், "சேலம் மதி (Salem Madhi)" என்ற விற்பனை செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து, தங்கள் கைபேசியின் மூலம் தங்களுக்கு விருப்பப்பட்ட, தேவையான பொருட்களை தேர்வு செய்து அதற்குண்டான ஆர்டர்களை வழங்கினால், அவர்களின் வீட்டுக்கே மகளிர் குழுக்கள் மூலம், அந்த பொருட்கள் விநியோகம் செய்யப்படும். பொருட்களைப் பெற்றுக் கொண்டபின் பணம் கொடுத்தால் போதுமானது. எனவே, அனைத்து பொதுமக்களும் 'சேலம் மதி' என்ற விற்பனை செயலி சேவையினை பயன்படுத்தி மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்களை தரமாகவும், குறைந்த விலையிலும் பெற்று பயன்பெறுவதோடு, உற்பத்தியாளர்களுக்கு உதவிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
எந்த வகை விவசாயம் தண்ணீரைத் அதிகமாக எடுத்துக் கொள்கிறது?
புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 75,000 பேருக்கு வேலை! தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments