விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருளை சந்தை படுத்தும் வரை பொருள்கள் ஃப்ரஷாக வைத்திருக்க குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி ஒன்றை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த தயாரிப்பு இயற்கை விவசாகிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
சென்னை ஐஐடியில் உள்ள உயிரி தொழில்நுட்பவியல் துறையை சார்ந்த ஆய்வு மாணவர்களான சௌமல்யா முகர்ஜி, ரஜனி காண்ட் ராய் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் துறையைச் சேர்ந்த ஷிவ் சர்மா ஆகிய மூன்று மாணவர்களும் இணைந்து டேன் 90 என்ற போர்டபிள் குளிர்பதனப்பெட்டியை வடிவமைத்துள்ளனர்.
விவசாய பொருட்கள் சந்தை படுத்துதல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டபோது, விவசாயிகள் அவர்களது விளைப் பொருட்களை வெகுதொலைவு கொண்டு செல்வதிலும், அதன் ஃப்ரஷ் தன்மை நீடித்து இருப்பதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டனர். கிராமங்கள் தோறும் சென்ற ஆய்வு மேற்கொண்ட மாணவர்கள், இறுதியாக இந்த குளிர்பதனப்பெட்டி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குளிர்பதனப்பெட்டி உருவாக்கும் பொழுது சில சவால்கள் இருந்தன. விவசாயிகளினால் மிகப்பெரிய குளிர்பதனப் பெட்டிகளை வாங்கி பயன்படுத்துவது என்பது அதிக பொருட்ச்செலவு, மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு அது சாத்தியமில்லை. எனவே விவசாயிகளுக்காக குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Tan90 செயல்பாடுகள்
மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த தெர்மல் பேட்டரி பொருத்தப்பட்ட இந்த குளிர்பதனப்பெட்டிக்கு Tan90 என்று பெயரிட்டுள்ளனர். இது 58 லிட்டர் கொள்ளளவைக் கொண்டது. மேலும் மற்ற பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த மணிநேரங்களில் இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் சார்ஜ் செய்யப்படுகின்றன. எனவே மின்சார உபயோகம் குறைவாகவே ஆகும். மேலும் இந்த கண்டுபிடிப்பு போக்குவரத்தின்போது இடைப்பட்ட நேரத்தில் உள்ள மின்சார இடையூறுகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த போர்டபிள் குளிர்பதனப் பெட்டியைக் கண்டுபிடித்த மாணவர்கள் நேரிடையாக விவசாயிகளுடன் சென்று சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது அந்த குளிர்பதனப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் அப்படியே வாடாமல் இருந்துள்ளன.
இந்த டேன் 90 விவசாய விளைப் பொருட்கள் மட்டுமல்லாது இறைச்சி, மீன், உயர் மதிப்புடைய மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளைக் கொண்டு சோதனை செய்யப்பட்டது. தமிழ்கம் மட்டுமல்லாது புதுச்சேரி, ராஜஸ்தான், கர்நாடகா, தெலங்கான ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடமும் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த புதிய குளிர்பதனப்பெட்டியின் விலை ரூ.5,000 முதல், ரூ.5,500 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது இயற்கை விவசாயப் பொருள்கள் உற்பத்தியாளர்களிடையே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்தியா புதிய கண்டுபிடிப்பு வளர்ச்சி திட்டம் 2.0 இல் சிறந்த கண்டுபிடிப்பாக இது தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிட தக்கது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments