குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முதலீட்டு மானியம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) தெரிவித்தார். சென்னையில் தொழில் துறை சார்பில் 'வெற்றிநடை போடும் தமிழகம்; தொழில் வளர் தமிழகம்' என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில் முதல்வர் பழனிசாமி புதிய தொழில் கொள்கைகளை (Industry policies) வெளியிட்டு பேசினார். உலகத் தொழில்களை ஈர்க்க இரண்டு புதிய தொழில் கொள்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
தொழில் கொள்கையின் நோக்கம்:
10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை (Investments) ஈர்த்து 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உற்பத்தி துறையில் ஆண்டுக்கு 15 சதவீதம் வளர்ச்சி அடைவது தான் தொழில் கொள்கையின் நோக்கம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க 'குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை - 2021 (Small and Medium Enterprises Policy - 2021) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சலுகை விலையில் நிலம்:
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய 22 மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50 சதவீதம் சலுகை விலையில், நிலம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இணையதளம் வழியாக 38 துறைகளில் 190 அனுமதிகள் வழங்கப்படும். தகுதி வாய்ந்த தொழில்களுக்கு முதல் நான்கு ஆண்டுகள் வரை முக்கிய அனுமதிகளுக்கு விலக்கு அளிக்கும் 'FastTN' திட்டம், வாகன உற்பத்திக்கு ஊக்கமளிக்க புதிதாக உருவாக்கப்படும். மாதிரி வாகனங்களை பதிவு செய்வது எளிதாக்கப்படும். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் (Investment subsidy) 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு 1.50 கோடி ரூபாய் வரைவழங்கப்படும்.
குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு (Provident fund) நிறுவனங்களின் பங்களிப்பு தொகையில் ஆண்டுக்கு ஒரு பணியாளருக்கு அதிகபட்சமாக 24 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசு மானியம் (Sibsidy) வழங்கும் .தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக 1000 கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கும்.தொழில் கொள்கையை பயன்படுத்தி பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் துவங்கி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னையில் நடந்த விழாவில் 28 ஆயிரத்து 53 கோடி ரூபாய் முதலீடு, மற்றும் 68 ஆயிரத்து 775 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு (Employment) உருவாக்கும் வகையில் 28 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) கையெழுத்தானது. 1971ல் துவக்கப்பட்ட சிப்காட் நிறுவனத்தின் 50 ஆண்டு பொன் விழாவையொட்டி 'லோகோ' தபால் தலை வெளியிடப்பட்டது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க புதிய செயலி அறிமுகம்!
இனி மின்கட்டணத்திலும் சேமிக்கலாம்! முன்கூட்டியே மின்கட்டணம் கட்டினால் வட்டி வழங்கப்படும்!
புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 75,000 பேருக்கு வேலை! தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments