முழு ஊரடங்கு (Full Curfew) காரணமாக கிர்ணி பழங்களை விற்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவை அறுவடை (Harvest) செய்யப்படாமல் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
கிர்ணி பழம் மற்றும் தர்பூசணி
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம் பெரியபகண்டை, மையனூர், யாழ் கிராமம் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பெரும் செலவு செய்து கிர்ணி பழம் மற்றும் தர்பூசணி (Watermelon) பயிரிட்டு பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு விளைந்து அமோக விளைச்சலை கொடுத்தது. இதனால் இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
அழுகும் பழங்கள்
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு (Full Curfew) அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதால், தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களை அறுவடை செய்து விவசாயிகள் விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பழங்கள் கொடியிலேயே கிடந்து அழுகி வீணாகி வருகிறது. ஆயிரக்கணக்கில் செலவு செய்தும், செலவு செய்த பணத்தை கூட திரும்ப எடுக்க முடியாமல் போய்விட்டதே என்று விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.
இழப்பீடு
கோடையில் பலரது தாகத்தை தணித்து மனதிற்கு குளிர்ச்சியை தந்த பழங்கள் இன்று அதை பயிர் செய்த விவசாயிகளுக்கு என்னவோ மனக்குமுறலை தான் கொடுத்து வருகிறது. எனவே விவசாயிகள் நஷ்டமடையாமல் இருக்க இனிவரும் காலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்யும் அனைத்து விதமான பயிர்களையும் பயிர் காப்பீடு (Crop Insurance) செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பழங்கள் அழுகிபோனதால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
ஊரடங்கில் வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை! அதிகாரி தகவல்
கொரோனா ஊரடங்கால் செடியிலேயே வீணாகும் வெள்ளரிப்பிஞ்சு! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
Share your comments