ரிசர்வ் வங்கி ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள கிசான் கிரெடிட் கார்டு டிஜிட்டல் கடன் திட்டம் முதற்கட்டமாக தமிழ்நாடு, மத்தியப் பிரதேச மாநிலங்களில் இம்மாதம் முதல் தொடங்கப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், “கிராமப்புறங்களில் அனைத்து வருமானப் படிநிலைகளில் உள்ள விவசாயிகள் மற்றும் ஊரக வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவைகள் வழங்குவதே ஊரக நிதிச் சேவை திட்டத்தின் நோக்கம்.
கிரெடிட் கார்டு டிஜிட்டல் கடன் திட்டம் (Credit Card Digital Loan)
இந்தியா போன்ற நாட்டில் கிராமப்புற கடன்கள் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையது.
தற்போது கிராமப்புறங்களில் கடன் வாங்குவதற்கு வங்கிக் கிளைக்கு சென்று நில உரிமை சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களை காட்ட வேண்டும். இதனால் ஒரு வாடிக்கையாளர் கடன் பெறுவதற்கு பல்வேறு முறை வங்கிக் கிளைக்கு வந்துபோக வேண்டியுள்ளது.
கிராமப்புற நிதிச் சேவைகளில் உள்ள சவால்களை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ஃபிண்டெக் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக பல்வேறு விஷயங்களை டிஜிட்டல் மயமாக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி ஆராய்ச்சி மையமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து கிசான் கிரெடிட் கார்டு டிஜிட்டல் கடன் திட்டத்தை உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் மற்றும் வங்கி அமைப்புகள், சேவை வழங்குநர்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள். கிசான் கிரெடிட் கார்டு கடன் வழங்குதலை டிஜிட்டல் மயமாக்கம் செய்வதால் கடன் வாங்குவோருக்கு செலவுகளும், அலைச்சலும் குறையும்.
டிஜிட்டல் மயம் (Digital)
இத்திட்டம் முதற்கட்டமாக தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் 2022 செப்டம்பர் முதல் தொடங்கப்படும். இதற்காக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பெடரல் வங்கி ஆகிய வங்கிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் இதற்கு ஒத்துழைப்பு தருகின்றன. முதற்கட்ட சோதனையில் கிடைக்கும் படிப்பினைக்கு ஏற்ப கிசான் கிரெடிட் கார்டு டிஜிட்டல் கடன் திட்டம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். இத்திட்டத்தால், கிராமப்புறங்களில் சேவை வழங்கப்படாத அல்லது குறைவான சேவை பெற்ற மக்களுக்கு கடன் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு கிராமப்புறங்களில் கடன் வழங்குவது மொத்தமாக மாற்றமடையும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
Share your comments