கிருஷி ஜாக்ரன், விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் ”Sheroes of Indian Agriculture” என்கிற பெயரில் ஆன்லைன் வாயிலாக கருத்தரங்கு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் வேளாண் துறை சார்ந்து சாதித்த பெண் விவசாயிகள் தங்கள் எழுச்சியூட்டும் கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அக்டோபர் 16, 2024 (இன்று), ராஷ்டிரிய மகிளா கிசான் திவாஸை முன்னிட்டு விவசாயத்தில் பெண்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் , “இந்திய விவசாயத்தின் செல்வாக்கு மிக்க பெண் விவசாயிகளின் வீராங்கனைகளைக் கொண்டாடுகிறோம்” என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் கருத்தரங்கினை க்ரிஷி ஜாக்ரன் நடத்தியது.
சமூகத்தை கட்டமைப்பதில் பெண்களின் பங்கு:
நிகழ்வில் பங்கேற்ற SKLTSHU-யின் துணைவேந்தர் டாக்டர் நீரஜா பிரபாகர் பேசுகையில், ”சமூகத்தை கட்டமைப்பதில் முதன்மையானவர்கள் பெண்கள் மற்றும் விவசாயத்தில் அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது” என்று குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள மொத்த விவசாயத் தொழிலாளர்களில் 33% பெண்களை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும் ஆண்கள் கிராமத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வது அதிகரித்து வருவதால், பெண்கள் விவசாயிகளாகவும் தொழில்முனைவோராகவும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தபோதிலும், அவர்களில் பெரும்பாலனோர் இன்றளவும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கின்றன. மேலும் பெண் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க உதவும் சுயஉதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் டாக்டர் நீரஜா பிரபாகர் தனது உரையில் வலியுறுத்தினார்.
இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு பெண்களே என்பதை சர்வதேச வேளாண் பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFAJ) முன்னாள் தலைவர் லீனா ஜோஹன்சன் தனது உரையில் மேற்கொள் காட்டினார். பால் பண்ணை மற்றும் உணவுப் பாதுகாப்பில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துரைத்தார். பெண்களின் பாரம்பரிய அறிவு உற்பத்தித்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பல்லுயிர் பெருக்கத்தையும் மேம்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டினார். விவசாயத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, பாலின சமத்துவத்தை வளர்க்கிறது என குறிப்பிட்டார்.
மெய்நிகர் கருத்தரங்கு நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பங்கேற்ற பெண் விவசாயிகள் தங்களது பணிகளையும், சாதனைகளையும் விரிவாக விளக்கினார். அதன் விவரங்கள் பின்வருமாறு--
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சுபா பட்நாகர், ”குங்குமப்பூ சாகுபடியில் தனது ஆரம்ப கால பயணத்தை மற்றவருடன் பகிர்ந்து கொண்டார். நவீன தொழில்நுட்பம் மற்றும் குடும்ப ஆதரவின் உதவியுடன் விவசாய பணியினை எவ்வாறு லாபகரமான தொழிலாக மாற்றினார் என்பதையும் விளக்கினார்.
சந்தை தொடர்பான நுண்ணறிவு:
ராஜஸ்தானைச் சேர்ந்த அன்னு கன்வர், காளான் வளர்ப்பில் தனது அனுபவங்களை எடுத்துரைத்து பேசினார். விவசாயத்தில் நுழையும் பெண்களுக்கு சந்தை தொடர்பான நுண்ணறிவு ஏன் இருக்க வேண்டும் என்கிற முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். பெண் விவசாயிகள் விவசாயத் தொழிலில் இறங்குவதற்கு முன் சந்தை நிலவரங்களை ஆராயுமாறும் வேண்டினார்.
ராஜஸ்தானின் பில்வாராவைச் சேர்ந்த பூர்வா ஜிண்டால் , தொற்றுநோய் காலத்தின் போது இயற்கை விவசாயத்தில் கால் பதித்து தனது எழுச்சியூட்டும் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். பொருளாதார மற்றும் சுகாதார நலன்களை வலியுறுத்தி, நிலம் வாங்கவும், இயற்கை காய்கறிகளை வளர்க்கவும் வேண்டுக்கோள் விடுத்தார்.
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பசுமை இல்லங்கள் மற்றும் மலர் வளர்ப்புத் தொழிலதிபரான மீனா குமாரி சாண்டல், சமூக ஊடகங்களுக்குப் பதிலாக கற்றல் மற்றும் விவசாயத்தில் நேரத்தை முதலீடு செய்யுமாறு பெண் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
ராஜஸ்தானின் ஜலாவரைச் சேர்ந்த சோனியா ஜெயின், மலர் வளர்ப்பு மற்றும் நிலையான விவசாயத்தில் தனது பங்களிப்புகளைப் பற்றி பேசினார். நிலையான விவசாயத்திற்கான தனது கட்டமைப்பையும், சக விவசாயிகளுக்கு எப்படி பயிற்சி அளித்து, பாலிஹவுஸ் அமைக்க அவர்களுக்கு உதவுகிறேன், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் முறைகள் குறித்தும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ராஜஸ்தானின் ஆல்வாரைச் சேர்ந்த உமா ரத்னு , பெண் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் அதே வேளையில், சுமார் 15,000 லிட்டர் பாலை பதப்படுத்தி விற்பனை செய்யும் Milk FPO நிறுவியது தொடர்பான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
விவசாயத் துறையில் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் இந்த மெய்நிகர் கருத்தரங்கு நிகழ்வில் விவாதிக்கப்பட்டு பெண் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
watch: கருத்தரங்கின் முழு நிகழ்வை காண க்ளிக் செய்க
Read more:
மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு- வேளாண் விஞ்ஞானிகள் கொடுத்த ஜடியா!
1400 பெண் பயனாளிகளுக்கு 50 % மானியத்தில் கோழிக்குஞ்சுகள்- ஆட்சியர் அறிவிப்பு!
Share your comments