கொரோனா நோய் பரவல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தொடர் வருவாய் இழப்பை சந்தித்து வரும் மாவிவசாயிகள், மாற்று விவசாயத்தில் ஈடுபடுவதற்காக தோட்டங்களில் உள்ள மாமரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மா சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40,000 ஹெக்டேருக்கு மேல் மா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,52,436 மெட்ரிக் டன் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, தோத்தாபுரி ரகம் 60%, செந்தூரா மற்றும் நீலம் ரகங்கள் 30% , அல் போன்ஸா 5% சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பீத்தர், மல்கோவா, ருமானி, பங்கனப்பள்ளி, காலப்பாடு போன்றவை 5 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது.
மாற்று விவசாயம் தேடும் மா விவசாயிகள்
மா விவசாயம் வாழ்வாதாரமாக கொண்டு மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் பெரிய தோட்டங்கள் வைத்துள்ள 75000கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மா விவசாயிகள் வருவாய் இழப்பினை சந்தித்து வருவதால், மா விவசாயத்தை கைவிட்டு மாற்று பயிர் செய்ய திட்டமிட்டு மாமரங்களை வெட்டி அகற்றும் பணியில் விவசாயிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதனையில் விவசாயிகள் - அரசிடம் கோரிக்கை
இதுதொடர்பாக மா விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் செயலாளர் சவுந்திரராஜன் உள்ளிட்ட பலர் கூறுகையில், மாவிவசாயத்தில் தொடர்ந்து வருவாய் இழப்பினை சந்தித்து வருகிறோம். 2019-ம் ஆண்டு மழையின்றி ஆயிரக்கணக்கான மாமரங்கள் வீணாகி காய்ந்து போயின. அரசு பதிவேட்டில் 60 லட்சம் மாமரங்கள் உள்ளதாக பதியப்பட்டுள்ளது. ஆனால் அரசு கணக்கைவிட 50% கூடுதலாக மாமரங்கள் உள்ளன.
இதேபோல் மாங்காய்களை தாக்கும் புதிய வகையான நோய், தரமற்ற மருந்து விற்பனை, புதிய தொழில்நுட்பம் குறித்த பயிற்சி இல்லாமை என பல்வேறு இன்னல்களை மாவிவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
இதன் காரணமாகவே, போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி பகுதியில் மாந்தோட்டங்களில் மாமரங்களை வெட்டி அகற்றும் பணியில் மா விவசாயிகள் வேதனையுடன் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 5000 மாமரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மாவிற்கு உரிய விலை, தரமான மருந்துகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, பயிற்சி உள்ளிட்டவை மூலம் மாவிவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க....
செப்டம்பர் வரை கொப்பரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவு! - விவசாயிகளுக்கு அழைப்பு!
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் பேரணி நடத்தினர்!
Share your comments