ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவிற்கு “செழிப்பை” கொண்டு வருவதற்காக ரூபாய் நோட்டுகளில் இந்து தெய்வங்களான லட்சுமி மற்றும் கணேஷ் ஆகியோரின் புகைப்படங்களை சேர்த்து அச்சிடுமாறு மத்திய அரசிடம் புதன்கிழமை (அக்.26) வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரிடம் இந்த யோசனை எப்படி வந்தது என்று கேட்டபோது, தனது வீட்டில் தீபாவளி பூஜை செய்து கொண்டிருந்தபோது, தனது நினைவுக்கு வந்ததாகக் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால், “நமது பொருளாதாரம் மீளவில்லை என்பதை நாம் அனைவரும் பார்க்க முடியும். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். அதற்காக நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் கடவுள் மற்றும் தெய்வங்களின் அருள் நம் மீது இருக்கும்போது மட்டுமே அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
இன்று, மத்திய அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், நமது நாணயத்தின் ஒரு பக்கத்தில் காந்திஜியின் படம் உள்ளது, அதை அப்படியே வைத்திருக்க வேண்டும், ஆனால் மறுபுறம், லட்சுமி ஜி மற்றும் கணேஷ் ஜியின் படங்கள் சேர்க்கப்பட வேண்டும், ”என்று கெஜ்ரிவால் கூறினார். தொடர்ந்து, ரூபாய் நோட்டுகளை மாற்றக் கோரவில்லை என்றும், லட்சுமி மற்றும் விநாயகரின் புகைப்படங்களைச் சேர்க்க புதிய நோட்டுகளைக் கோருவதாகவும் கூறினார்.
அப்போது, “தினமும் புதிய கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இந்த படங்களை பின்னர் சேர்க்கலாம், ”என்று கெஜ்ரிவால் கூறினார், இரண்டு கடவுள்களும் செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறினார்.
பின்னர், இந்தோனேசியாவை உதாரணம் காட்டி, “இந்தோனேசியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு, 2-3 சதவீத இந்துக்கள் மட்டுமே உள்ளனர், அவர்களின் கரன்சியில் விநாயக பெருமானின் புகைப்படம் உள்ளது. இந்தோனேசியாவே செய்யும்போது ஏன் அதைச் செய்ய முடியாது” என்றும் கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில், தமது கோரிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, இவ்வாறு கோரிக்கை விடுத்தால் மக்கள் உங்களை இந்துத்துவா கட்சி என்று கூறுவார்களே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
மக்கள் எதையும் சொல்வார்கள் எனப் பதில் அளித்தார். மேலும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.
மேலும் படிக்க:
Share your comments