கடந்த ஆண்டு கால்நடைப் பராமரிப்பு சார்ந்து பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. விவசாயம் கைகொடுக்க தவறும் காலங்களில் கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும் என்பதால்தான் பெரும்பாலான விவசாயிகள் உபத்தொழிலாக இதனை செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசும் முதற்முறையாக 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கால்நடைக்கு என்று தனி அமைச்சரவையை உருவாக்கியது. இதோ உங்களுக்காக பெரிதும் பேசப்பட்ட திட்டங்களின் தொகுப்பு.
20வது கால்நடை கணக்கெடுப்பு
இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இருபதாவது கால்நடை கணக்கெடுப்பின் முடிவுகள் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஒட்டுமொத்த கால்நடைகளின் எண்ணிக்கையில் 4.6 சதவீதம் அளவிற்கு உயர்வு இருந்தது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக வரையறை செய்யப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத உள் நாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை 6 சதவீதம் அளவிற்கு குறைந்திருந்தது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தேசிய விலங்குகள் நோய் தடுப்புத் திட்டம்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுராவில் பாரத பிரதமர் அவர்கள் கோமாரி நோய் மற்றும் கன்று வீச்சு நோய் ஆகிய இரண்டு நோய்களையும் கட்டுப்படுத்தி முழுவதுமாக அழிப்பதற்கான தேசிய விலங்குகள் நோய்த் தடுப்பு திட்டம் ஒன்றை தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள கால்நடைகளுக்கு இவ்விரு நோய்களுக்கு எதிரான தடுப்பு ஊசிகள் இலவசமாக அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
பசு ஆதார்
50 சதவீதத்திற்கும் குறைவான செயற்கை முறை கருவூட்டல் செய்யப்படும் 600 மாவட்டங்களில் கால்நடைகளுக்கான தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெறும் கால்நடைகளுக்கு தனித்துவ அடையாள எண் (ஆதார் எண்) கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது இந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது
கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை
1962 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம் கால்நடைகளின் வீட்டிற்கே வந்து கால்நடைகளுக்கான முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான ஆம்புலன்ஸ் சேவையை தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் பொருட்டு நவம்பர் மாதம் புதியதாக 22 ஆம்புலன்ஸ் சேவை இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இதற்காக இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாயை செலவு செய்தது தமிழக அரசு. இந்தியாவிலேயே முதன் முறையாக கால்நடைகளுக்கான நடமாடும் இரத்த வங்கி சேவையை துவக்கியது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கைக்கழகத்தில் உள்ள இந்தியாவின் முதல் கால்நடை இரத்த வங்கி.
புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி
தமிழ்நாட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் ஐந்தாவது கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவில் மேம்பட்ட ஒருங்கிணைந்த கால்நடை மற்றும் விலங்கின ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. 80 இளநிலை இடங்களோடு தொடங்கப்படும் இந்த கல்லூரி அடுத்த கல்வி ஆண்டு 40 இளநிலை மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க உள்ளது.
பெட்டைக் கன்றுகள் பிறப்பதற்கான திட்டம்
தமிழக அரசு விவசாயிகள் பொதுவாக பெட்டை கன்றுகளையே விரும்புவதால் கால்நடைகளின் விந்தணுவில் குரோமோசோம் அளவில் கண்டறிந்து பெட்டை கன்றுகள் மட்டுமே பிறப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. அதன்படி சோதனை அடிப்படையில் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறையில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின்கீழ் விந்தணு சேகரிக்கப்பட்டு பெட்டை கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யும் குரோமோசோம் கள் கண்டறியப்பட்டு அவை செயற்கை முறை கருவூட்டல் மூலமாக பசு மாடுகளுக்கு செலுத்தப்படும்.
ஒப்பந்தப் பண்ணைய சட்டம்
இந்திய மாநிலங்களிலேயே முன்னோடியாக தமிழ்நாடு அரசு ஒப்பந்த பண்ணையத்தில் ஈடுபடும் விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் மற்றும் எளிதாக்குதல்) சட்டத்தை இயற்றி ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதன்மூலம் விவசாயிகள் தங்களுடைய வேளாண் பொருள்களுக்கு முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்து இழப்பை தவிர்ப்பதற்கு வகை செய்யப்பட்டது.
தமிழக முதல்வர் அமெரிக்கா பயணம்
தமிழக முதல்வர் மற்றும் தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு துறை அமைச்சர் ஆகியோர் அமெரிக்காவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த சுற்றுப்பயணத்தில் அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாண பல்கலைக்கழகம், வாஷிங்டன் மாகாண பல்கலைக்கழகம் மற்றும் பல கால்நடைப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தேசிய வேளாண் உயர் கல்வி திட்டத்தின் (NAHEP-IDP) கீழ் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவர்கள் குழு தங்களுடைய உள்ளிடைப் பயிற்சிக்காக அமெரிக்காவிற்கு சென்றது.
கால்நடை வளர்ப்போருக்கான செயலிகள்
இந்த ஆண்டு திறன்பேசிகள் மக்களின் வாழ்வில் முக்கிய இடத்தை ஆக்கிரமித்து இருந்தது. சமூக தளத்தில் புதிய புதிய செயலிகள் உருவெடுத்ததைப் போல கால்நடை வளர்ப்பிலும் பல பயனுள்ள செயலிகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் ஆடு வளர்ப்புக்கான செயலியை அறிமுகம் செய்து வெளியிட்டது திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். Blood4pet என்னும் செயலியை செல்லப் பிராணிகளுக்கான இரத்தக் கொடையாளர்களை ஒருங்கிணைப்பதற்கு உருவாக்கி வெளியிட்டது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் சிகிச்சையியல் இயக்குநரகம்.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07
Share your comments