தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை நீக்க உத்தரவு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனால், விவசாயிகளும், வேளாண் சார்ந்த பணியாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள போதும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் எவ்வித தடையின்றி கிடைப்பதற்கான அனைத்து வகையான ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. அதன்படி, அன்றாடம் தேவைப்படும் பால், காய்கறிகள் மற்றும் பழங்கள் என அனைத்தும் அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கிடைக்கும் வகையில் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்திருந்தது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளை விற்க முடியாமல் அழுகி போவதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். அறுவடை மற்றும் விதைப்பு ஆகியன தொய்வின்றி நடைபெற்றால் தான் இனி வரும் காலங்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை விளைச்சல் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்பதால் ஊரடங்கு உத்தரவில் இருந்து விவசாயத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
மத்திய அரசு அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வேளாண் மற்றும் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க அனுமதி வழங்கி உள்ளது. வேளாண் பொருட்களான காய்கறிகள், கீரைகள், பழங்கள் தடையின்றி கிடைக்கவும், விளை பொருள்கள் வீணாகாமல் சந்தைபடுத்துவதற்கு எதுவாகவும், விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் படி,
- விளை பொருள்கள் கொள்முதல் நிலையங்கள்
- விற்பனை மையங்கள், மண்டி, சந்தைகள்
- உர உற்பத்தி ஆலைகள், உர விற்பனை கூடங்கள்,
- வேளாண் இயந்திர வாடகை மையங்கள்,
- விவசாயப் பணிகள் மற்றும் விவசாய கூலிப் பணிகள்,
- பூச்சிக் கொல்லி தயாரிப்பு நிறுவனங்கள்,
- விவசாயம் சார்ந்த இயந்திரங்கள் மாநில எல்லைகளை தாண்டி உள்ளேயும், வெளியேயும் எடுத்த செல்ல அனுமதி அளித்துள்ளது.
அதே சமயம் அரசின் சமூக விலக்கல் நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் விதிகளை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share your comments