1. செய்திகள்

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் - பிப்., 8 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : Daily thanthi

தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதைத்தொடர்ந்து வரும் 8ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

1% கீழ் குறைந்த கொரோனா தொற்று

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் கடந்த இரண்டு வாரமாக, ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 550 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000க்கு மேல் இருந்து தற்போது 4,629 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.

மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 31.1.2021 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 29.1.2021 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.1.2021 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 28.2.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது :

பள்ளி, கல்லூரிகள் திறப்பு

  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப்படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கெனவிடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

  • பள்ளிகள் (9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும்) 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

நிபந்தனைகளுடன் 100% இயங்க அனுமதி

  • இரவு 10.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

  • மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி 01.02.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கண்காட்சிக் கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

 

நிபந்தனைகளுடன் நிகழ்ச்சிகளை நடத்தலாம்

  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள்அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள், 01.02.2021 முதல், நடத்த அனுமதிக்கப்படுகின்றன. திறந்தவெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பொறுத்தவரையில் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகளுடன் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டநடைமுறை தொடரும்.

  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, விளையாட்டு நிகழ்ச்சிகளில் (கிரிக்கெட் உட்பட), அதிகபட்சம் 50 சதவிகிதம் இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

  • உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, இராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

  • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

  • Ø தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

  • தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணிவது கட்டாயம்

இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்,

மேலும் படிக்க...

மழை பாதிப்பு : 11 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு!!

அதிக மகசூல் பெற அற்புதமான வழி- விபரம் உள்ளே!

பயிர்க்கடன் நிறுத்தம் இல்லை - விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

English Summary: Lockdown Relaxation - Opening of Schools and Colleges from February 8 says Tamil Nadu chief minister Published on: 01 February 2021, 04:06 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.