இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இன்று மார்ச் 1ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை சென்னையில் ₹50 உயர்ந்து 1,118.50 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் , கேஸ் சிலிண்டர் விலை ₹ 1068.50 க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் சார் எதிரி யார் தெரியுமா? நடிகை ரோஜாவின் கேள்வி
தமிழ்நாட்டின் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் “ ஸ்டாலினின் எதிரி கலைஞர் தான் “ என நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா பேசியது தொண்டர்களிடையே கரவொலியை ஏற்படுத்தியது. திமுகவின் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், அரசு அதிகாரிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று முதல்வர் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
வேளாண்மை தனிநிதி நிலை அறிக்கை தொடர்பாக வேளாண் அமைச்சர் தலைமையில் கூட்டம்!
28 பிப்ரவரி வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை தனிநிதி நிலை அறிக்கை தொடர்பாக துறை தலைவர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர்/ அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண் வணிகத் துறை இயக்குநர் எஸ்.நடராஜன், வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ. ஆண்ணாதுரை, டாக்டர்.ஆர்.முருகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
நடப்பு ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்தொற்றுக்கு, தடுப்பூசிப் பணி தங்களது கிராமங்களில் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. விவசாயிகள் தங்களின் கால்நடைகளை இக்கோடிய நோயிலிருந்து காத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகிலிருக்கும் அரசு கால்நடை மருந்தகத்தை அணுகவும். இத்தகவலை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய கருத்துக்காட்சியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற சிறுதானிய கருத்துக்காட்சியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி பார்வையிட்டார். சர்வதேச சிறுதானிய ஆண்டிற்கான மையப்பயிராக தமிழ்நாட்டில் ராகி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசினால் தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் சிறுதானிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திலுள்ள மதுராபாய் திருமண மண்டபத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுதானிய கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைபடுத்தும் திட்டம் குறித்து முழுமையான தகவல்
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (TANSTIA) சார்பில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைபடுத்தும் திட்டம் (PMFME) செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் குறித்த ஒரு இணையவழி நிகழ்ச்சி மார்ச் 2, 2023 வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இலவசம், மேலும் விவரங்களுக்கு 044-22501302 / 9789838172 என்ற உதவி எண்ணை தொடர்புக்கொள்ளவும்.
புத்தூரில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம்
திருச்சி மாவட்டத்திலுள்ள புத்தூர் பகுதியில் 2.14 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம் அமைக்க அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த 2021-2022 ஆம் ஆண்டு முதன் முறையாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2021 விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும், நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் திட்டத்தின் செயல்பாடியிலும் தாமதம் ஏற்பட்டது. தற்போது, விதைச்சான்று மையம் அமைப்பதற்கான நிதியை சமீபத்தில் அரசு ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் விதைப்பரிசோதனை, விதைக்கான உரிமம் மற்றும் சான்றளிப்பு போன்றவற்றை பெற விவசாயிகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருக்காது என்பது குறிப்பிடதக்கது.
நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மக்காச்சோளம், பருத்தியையும் கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டு தங்களது குறைகளை கூறினர். தொடர்ந்து, தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய, மண்டல, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கண்காட்சிகளில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வாய்ப்புகள் வழங்கி வருகிறது. இவ்வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள, கண்காட்சி நடைபெறும் விவரம் அறிய மற்றும் கண்காட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்ய இணைய வழிப் பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோயம்புத்தூரில் மார்ச் 4 முதல் 12 வரை நடைபெற உள்ள மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் http://exhibition.mathibazaar.com/login இணையத்தில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
TN மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்| மூலிகை தோட்டம் 50% மானியம்| TN Budget தேதி அறிவிப்பு!
மிளகாய் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலை துறை ஆலோசனை
Share your comments