இன்றைக்கு இருக்க கூடிய வாழ்கை ஓட்டத்தில், அவசர வாழ்கை முறையில் பெரும்பாலானோர் கையில் கிடைப்பதை சாப்பிட்டுவிட்டும், நேரமின்மையை கருத்தில் கொண்டு பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டுவிட்டும் உடலுக்கு தம்மை அறியாமல் பல தீங்குகள் செய்வதுண்டு.
இது வருங்காலத்தில் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இன்று பலரும் அறிந்துகொள்வதில்லை, எனவே இதனை மாற்றும் சிந்தனை கொண்டவர்கள் தமிழகத்தை பொறுத்தளவில் மிகவும் குறைவு. அவ்வாறு இதனை மாற்றும் நோக்கில் மதுரையில் கார்த்திகேயன் என்பவரால் தொடங்கப்பட்ட உணவகம் தான் இந்த தானிய குடில் இயற்கை உணவகம்.
3 வேளையும் தானிய உணவுகள்:
இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையிலும் பல வகையான தானியங்களில் செய்யப்பட்ட தோசை, இட்லி, ஆப்பம், பணியாரம் என அனைத்தும் விற்கப்படுகின்றன.
தினசரி உணவுகள் மட்டுமல்லாது குழந்தைகளுக்கு பிடித்த சிறுதானிய லட்டு, அமெரிக்க பண்டமான சாக்லேட் பிரவுனி, உளுந்து ஜாங்கிரி, சிறுதானிய அல்வா, தினை மைசூர்பாக் என பல வகையான இனிப்புகளும்.தானிய மிக்சர், சிறுதானிய சேவு, கார பூந்தி, சிறுதானிய முருக்கு, சிறுதானிய சிப்ஸ் என வகைப்பட்ட காரங்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த கடையின் உரிமையாளர் கார்த்திகேயன் நம்மிடம் பேசியபொழுது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும், பின்பு தொழில் மீது கொண்ட நாட்டத்தினாலும் இயற்கை உணவகம் தொடங்கவேண்டும் என்ற ஆசையுடனும் இந்த உணவகத்தை 2010ல் தொடங்கியதாக கூறினார்.
மேலும் முதன்முதலில் உணவகத்தை தொடங்கியபோது உளுந்து களி மற்றும் இதர சாதாரண உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகவும் பின்னர் படிப்படியாக இன்று இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் பிரவுனி வரை வளர்ந்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் படிக்க
Share your comments