1200 அடிக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டிட மற்றும் திட்ட அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கட்டிடங்களுக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை நடைமுறை படுத்தும் வகையில் பொதுமக்கள் தங்கள் மனைகளுக்கான கட்டிட மற்றும் திட்ட அனுமதியை இணையதளம் வாயிலாகவே பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதில் கட்டிட மற்றும் திட்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகள் எடுத்துக்கொள்ளும் கால அவகாசத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு மாதிரி கட்டிட விதிகள் 2016 இன் படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மனை பிரிவுகள், உள்ளாட்சிகளால் அங்கீகரிக்கப்பட்ட தனிமனைகள், குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவுகளில் 2500 சதுர அடி பரப்புக்கு மேற்படாத நிலத்தில் 1200 சதுர அடிக்குள் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு களஆய்வின்றி ஆவணங்கள் மூலம் கட்டிட மற்றும் திட்ட அனுமதி வழங்கப்படும்.
நடைமுறையில் உள்ள மனைப்பிரிவுகள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும், அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை முறைப்படுத்தப்படும் திட்டத்தின்கீழ், 15 மாநகராட்சிகளில் முறைப்படுத்தப்பட்ட 7,291 மனைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 50,423 மனைகளும், 121 நகராட்சிகளில் முறைப்படுத்தப்பட்ட 7,145 மனைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 46,371 மனைகளும், 528 பேரூராட்சிகளில் முறைப்படுத்தப்பட்ட 7,845 மனைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 86,163 மனைகளும், என இதுவரை மொத்தம் 22,281 மனை பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட 1,82,957 மனைகளின் உரிமையாளர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இனிமேல் மக்கள் தங்களது குடியிருப்புக்கான கட்டிட மற்றும் திட்ட அனுமதியை எளிய முறையில் பெறலாம். மேலும் இந்த நடைமுறையால் மக்கள் உள்ளாட்சியில் பதிவு பெற்ற பொறியாளர்களை தவிர வேறு உள்ளாட்சி அலுவலகங்களில் செல்ல வேண்டிய நிலை இருக்காது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments