நெல் மூட்டைகள் சேதமாவதை தடுக்க விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்வதற்காக நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மழையில் வீணான நெல் மூட்டைகள்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த பெரு மழையின் போது, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, மழையினால் நெல் வீணாகாமல் பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசு அறிக்கை தாக்கல்
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெல் கொள்முதலுக்காக மொத்தம் 468 சேமிப்பு கிடங்குகள் உள்ளதாகவும், இதில் 3,034,000 டன் நெல்லை பாதுக்காக்க முடியும் என்றும் இந்த சேமிப்பு கிடங்குகளை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் நெல் கொள்முதல் நிலையம்
மேலும் விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்வதற்காக நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொள்முதல் நிலையத்தில் இருந்து தூரத்தில் இருக்கக் கூடிய விவசாயிகள், நெல்லை கொண்டு வருவதற்கு ஏற்படக்கூடிய செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
மேலும் படிக்க....
நெற் பயிரைத் துவட்டி எடுக்கும் தண்டு துளைப்பான் நோய்- துவம்சம் செய்ய எளிய வழிகள்!
பயிர்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைப்பு முறையை விவசாயிகள் கையாள வேண்டும்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு!
நாட்டுக்கோழி வளர்ப்பில் முட்டையின் சத்துக்களுக்கு தேவையான தீவனங்கள்!
Share your comments