மிக தீவிர தொற்று பரவலுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாகத் தான், குரங்கு அம்மை பரவலை பார்க்கிறேன் என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
குரங்கு அம்மை (Monkey Pox)
குரங்கு அம்மை நோய் குறித்து சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது: 'ஆர்த்தோபாக்ஸ்' இனத்தைச் சேர்ந்த, 'மங்கிபாக்ஸ்' வைரசில் இருந்து தான் குரங்கு அம்மை தொற்று பரவுகிறது. இது பெரியம்மை நோயை போலவே உள்ளது. 1979 - 80 களிலேயே பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதற்காக தடுப்பூசி போடும் பணிகள் உலக அளவில் அப்போதே நிறுத்தப்பட்டுவிட்டன.
இத்தனை ஆண்டு இடைவெளியில் பெரியம்மை வைரஸ் உலகம் முழுதும் மெல்ல பரவ வாய்ப்பு இருக்கக்கூடும். ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் என்ற நிறுவனம், குரங்கு அம்மைக்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. ஆனால், அதன் செயல்திறனை ஆராய வேண்டி உள்ளது. பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு பயன்படுத்தலாம் என, உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த தடுப்பூசியின் கையிருப்பு உலக அளவில் குறைவாகவே உள்ளது. சீரம் இந்தியா போன்ற நிறுவனம், அதை தயாரித்து விநியோகிக்கும் பணியை செய்ய வேண்டும். மிக தீவிர தொற்று பரவலுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாக தான், குரங்கு அம்மை பரவலை பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
Share your comments