1. செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் புதியக் கதவணை கட்டும் பணிகள் தீவிரம்!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் வீணாகக் கடலில் சென்றுக் கலப்பதைத் தடுக்கும் வகையில், 396 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கதவணை அமைப்பதற்கான பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

காவிரி-கொள்ளிடம் ஆறுகள்

திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீரை பிரித்து வழங்கக்கூடிய இடம்தான் திருச்சி முக்கொம்பு மேலணை ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படுகிற தண்ணீர் நாமக்கல், கரூர் மாவட்டங்கள் வழியாக திருச்சி முக்கொம்பு மேலணையை அடைகிறது.

இந்த முக்கொம்பு மேலணைதான் காவிரி ஆற்றை இரண்டாக பிரிக்கிறது. இதில் ஒரு பகுதி தண்ணீர் பாசனத்திற்காக காவிரி ஆற்றிலும், மற்றொரு பகுதி உபரி நீராக கொள்ளிடம் ஆற்றிலும் விடப்படுகிறது. அந்த உபரி நீரை வெளியேற்றுவதற்காக கொள்ளிடம் ஆற்றில் கதவணை உள்ளது.

9 மதகுகள் உடைந்தன

182 ஆண்டுகள் பழமையான கொள்ளிடம் கதவணையின் மூலம் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, அதிகப்படியான உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 890 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேறியது. அதிகபட்ச உபரிநீர் வெளியேறிக்கொண்டிருந்ததால் அழுத்தம் தாங்காமல் ஆகஸ்டு 22-ந் தேதி இரவு கொள்ளிடம் ஆற்றின் தெற்கு கதவணையில் உள்ள 9 மதகுகள் தொடர்ச்சியாக உடைந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

தற்காலிக தடுப்பு

எனவே, அணை உடைந்த பகுதியில் ரூ.38 கோடிக்கு தற்காலிகமாக எஞ்சியுள்ள கதவணையில் உள்ள மதகுகளை ஷீட்பைலிங் மூலம் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்காலிக தடுப்பணை பணிகள் முடிக்கப்பட்டதன் மூலம் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பிலான காவிரி டெல்டா பாசன பகுதியின் பாசனமும் உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் நிறுத்தம்

அதைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் உடைந்த மதகுகள் அருகே கீழ்புறம் ஒரு புதிய கதவணை கட்டுவதற்கு ரூ.387 கோடியே 60 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கியது. கதவணையில் தெற்கு மற்றும் வடக்கு கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே 55 புதிய மதகுகள் அமைக்கும் பணிக்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தன. கிட்டத்தட்ட 35 சதவீத பணிகள் முடிந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. அப்பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்பி விட்டனர்.

Credit : The hindu

மீண்டும் பணிகள் துவக்கம் 

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் இருந்து சில பணிகளுக்கு அரசு விலக்கு அளித்தது. அதில் கட்டுமான பணியும் ஒன்றாகும். மேலும் அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனாவால் தடைபட்ட கொள்ளிடம் புதிய தடுப்பணை கட்டும் பணியும் மீண்டும் தொடங்கப்பட்டது. வழக்கமாக தினமும் 280 பணியாளர்கள் ஈடுபடுவர். ஆனால், தற்போது 180 பணியாளர்களை கொண்டு வேலை நடந்து வருகிறது.

60 % பணிகள் நிறைவு 

கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட வரும் கதவணை அமைக்கும் பணிகளில், தற்போது கீழ்தள பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதுவரை, 60 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. இப்பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக பணியை முடிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இயற்கை ஏதாவது தடை செய்தால் மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கதவணை முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு, நாகை மாவட்டத்தில் செயல்படும், 610 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் செயல்படும், குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தெற்கு ராஜன், வடக்கு ராஜன், குமிக்கி மண்ணியாறு போன்ற ஆறுகள் வழியாக, 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெறும். மேலும்,வெள்ளம் வரும் காலங்களில், தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பது தடுக்கப்படும்.

கதவணைத் திட்டத்திற்கு அமோக வரவேற்பு தெரிவித்துள்ள நாகை விவசாயிகள் பணிகளை விரைந்து முடித்து, கதவணையைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முறையான பயிர்வாரி சாகுபடி முறைகள் & தொழிநுட்பங்கள் - பகுதி-1!

மழைக்காலத்தில் செம்மறி ஆடுகளைத் தாக்கும் நோய்கள்- பாதுகாக்கும் வழிகள்!!

English Summary: New Barrage construction works Under Kollidam river is progressive Published on: 06 July 2020, 08:30 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.