1. செய்திகள்

கலப்பட பொருட்களை தயாரித்தால் தண்டனை! - புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமல்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Consumer protection act
Image credit: Mumbai mirror

நுகர்வோர் பாதுகாப்பு மசோதா-2019 அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் கலப்பட பொருட்களை தயாரித்தாலோ, விற்றாலோ தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கு பதிலாக, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா-2019 (Consumer protection act 2019) நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து காணொளிக் காட்சி மூலம் மத்திய நுகர்வோர்நலம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசினார்.

நுகர்வோருக்கு அதிக அதிகாரம்

இந்தப் புதிய சட்டம் நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதுடன், நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில்கள், நுகர்வோர் பிரச்சினைத் தீர்வு ஆணையம், மத்தியஸ்தம், கலப்படம் மற்றும் போலிப்பொருள்கள் விற்பனை அல்லது உற்பத்திக்குத் தண்டனை போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் என்றார்.

இந்த சட்டத்தின் மூலம் நுகர்வோரின் உரிமைகளை அமல்படுத்துதல், பாதுகாத்தல், ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க சட்டம் வகை செய்கிறது என்றும் அவர் கூறினார்.

நுகர்வோர் உரிமைகள் மீறல்களை விசாரித்தல், புகார்கள், வழக்குகளைப் பதிவுசெய்தல், பாதுகாப்பற்ற பொருட்கள் மற்றும் சேவைகளைத் திரும்பப் பெறுதல், நியாயமற்ற வணிக நடைமுறைகள், திசைதிருப்பும் விளம்பரங்களை ரத்து செய்தல், தவறான விளம்பரங்களைத் தயாரிப்போர், அனுமதி அளிப்போர், வெளியிடுவோருக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள சிசிபிஏ-வுக்கு (Central Consumer Protection Authority) அதிகாரம் வழங்கப்படும்.

இ-வணிகத்தளங்கள் விதிக்கும் நியாயமற்ற வணிக நடைமுறைகளுக்கான விதிமுறைகளும் இந்தச்சட்டத்தின் கீழ்வரும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்அமைத்தல், இ-வணிகத்தில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பதற்கான விதிமுறைகள் குறித்த அரசிதழ் அறிவிக்கை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Image credit: Law score

எளிமையாக்கப்பட்ட நீதி நடைமுறைகள்

மாநில , மாவட்ட ஆணையங்கள் தங்கள் உத்தரவுகளை மறு ஆய்வு செய்தல், நுகர்வோர் தங்கள் புகார்களை மின்னணு அடிப்படையில் தாக்கல் செய்யவும், நுகர்வோர் ஆணையங்களில் தங்கள் இருப்பிடம் அமைந்துள்ள பகுதிக்கு உட்பட்டு புகார்களைத் தாக்கல் செய்யவும் வகை செய்யும் நுகர்வோர் தாவா நீதிநடைமுறைகளை எளிதாக்க புதிய சட்டத்தில் இடமுள்ளதாக பாஸ்வான் தெரிவித்தார்.

மேலும், விசாரணையை காணொளிக் காட்சி மூலம் நடத்தவும், புகார்களை விசாரணைக்கு ஏற்பதற்கான குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படாவிட்டால், அவற்றை ஏற்க அனுமதிப்பது போன்றவற்றுக்கும் புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் தாவா தீர்வு ஆணையத்தின் விதிமுறைப்படி, ரூ.5 லட்சம் வரையிலான வழக்கு தாக்கல் செய்ய கட்டணம் ஏதுமில்லை என்று அவர் தெரிவித்தார். மின்னணு அடிப்படையில் புகார்களைத் தாக்கல் செய்ய வசதி உள்ளது. அடையாளம் தெரியாத நுகர்வோர் விஷயத்தில் நுகர்வோர் நலநிதியில் கடன்பெற முடியும். காலியிடங்கள், தீர்க்கப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி மாநில ஆணையங்கள் மத்திய அரசுக்கு காலாண்டுக்கு ஒருமுறை தகவல் அளிக்கும்.

பொதுவான விதிகள் தவிர, புதிய சட்டத்தின் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் விதிகள், நுகர்வோர் தாவா தீர்வு ஆணைய விதிகள், மாநில/மாவட்ட ஆணைய உறுப்பினர்கள், தலைவரை நியமிப்பதற்கான விதிகள், மத்தியஸ்த விதிகள், மாதிரி விதிகள், இ-வணிக விதிகள், நுகர்வோர் ஆணைய நடைமுறை ஒழங்குமுறை, மத்தியஸ்த ஒழுங்குமுறை ஆகியவையும் உள்ளன. மாநில ஆணையம் மற்றும் மாவட்ட ஆணைய நிர்வாகக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையும் இதில் அடங்கும்.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்

மத்திய நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரைத் தலைவராக கொண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 34 உறுப்பினர்களையும் கொண்ட நுகர்வோர் பிரச்சினைகள் பற்றிய ஆலோசனை அமைப்பான மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சிலை அமைப்பதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் விதிகளில் இடமுள்ளதாக பாஸ்வான் தெரிவித்தார்.

முந்தைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986-இல் நீதி வழங்க ஒற்றை அம்ச அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதால், காலவிரயம் ஆனதாகவும், பாரம்பரிய விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமல்லாமல், புதிய இ-வணிக சில்லரை விற்பனையாளர்கள்/தளங்களில் இருந்தும் வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க பல திருத்தங்கள் செய்த பின்னர் இந்தப் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் ராம்விலாஸ் பாஸ்வான் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க ....

தோட்டக்கலை துறையின் ஊக்கத்தொகை திட்டம்! - ஹெக்டேருக்கு ரூ.2,500/- எப்படி பெறலாம்?

இன்சுலின் செடி எனப்படும் சர்க்கரைக் கொல்லி சாகுபடி பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க...!

ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை - கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

English Summary: New Consumer Protection Act 2019 comes into force Published on: 21 July 2020, 05:47 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.