"புதிய உத்திகள் எங்கிருந்தாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால், அவற்றை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்" என்று அரசுத் துறைச் செயலர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசுத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இரண்டாவது ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "நேற்றைய தினம் இதேபோன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 16 துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் இறுதியில், அரசுச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் எவ்வாறு அரசின் திட்டங்களை வடிவமைத்து, செயலாக்கத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று விரிவாக எடுத்துக் கூறியிருந்தேன்.
அந்தக் கருத்துக்களை எல்லாம் நீங்கள் செய்தித் தாள்களில் கவனித்திருப்பீர்கள். இருப்பினும், இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள துறைகளின் முக்கியத்துவம் கருதியும், இன்றைய ஆய்வில் நீங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும், எனது எண்ணங்கள் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நேற்று நான் குறிப்பிட்டபடி, இந்த அரசானது தற்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த ஆண்டு குறிப்பாக, புதிய அரசாக நாம் பொறுப்பேற்ற தருணத்தில், நமது மாநிலத்தையே முடக்கிப் போட்ட கரோனா பெருந்தொற்று, வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் மோசமான நிதி நிலைமை என்று ஒரே நேரத்தில் பல சவால்களை நாம் எதிர்கொண்டு, அதில் ஓரளவிற்கு குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றோம்.
மக்கள் நலன் கருதியும், மாநிலத்தை ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், பல்வேறு அறிவிப்புகளை நாம் கடந்த ஆண்டு அறிவித்திருக்கிறோம். அப்படி அறிவித்த அறிவிப்புகளில் சிறப்பான வகையில் சில திட்டங்கள் செயலாக்கத்திற்கு வந்திருக்கிறது. அதற்காக முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருந்தாலும், சில துறைகளில் இன்னும் அரசாணைகள் வெளியிடுவதில் தாமதம் காணப்படுகிறது. அதற்கான காரணங்களை நீங்கள் இங்கே தெரிவித்திருக்கிறீர்கள். அதையும் களைந்து விரைவான, தேவையான அனைத்து ஆணைகளும் நீங்கள் வெளியிட வேண்டும். இதில் நீங்கள் நேரடியாக கவனத்தை செலுத்த வேண்டும்.
வேளாண்மைத் துறையைப் பொறுத்தவரையில், உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்துவதிலும், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய Agricultural Marketing அந்தத் துறையை பலப்படுத்திடவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களை பெருமளவில் அமைக்கவும் வேண்டும் என்று இதன்மூலம் மட்டுமே, விவசாயிகளின் வருமானத்தை நாம் அதிகரிக்க முடியும். ஆகவே, இதில் இத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இதுபோன்று ஒவ்வொரு துறைக்கும், தனக்கான Target Population யார் என்பதை தெளிவாக உணர்ந்து, அவர்களுக்கு திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில், நேற்று நான் குறிப்பிட்டதை மீண்டும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவது, தமிழக மக்கள் இந்த அரசின் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும்.
புதிய உத்திகளை, அவை எங்கிருந்தாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால், அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி நீங்கள் செய்தால், உங்களை ஊக்குவிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. ஒவ்வொரு துறைத் தலைவரும், தங்கள் அமைச்சருடன் இணைந்து, தனது துறையில் செம்மையாகச் செயல்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தையும், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் நிறைவேற்றிட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
IRCTC: ரயில்வேயின் அதிர்ச்சி செய்தி! இனி லக்கேஜ் இலவசம் இல்லை!
Share your comments